வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (15/02/2018)

கடைசி தொடர்பு:09:12 (16/02/2018)

தனியார் கல்விக் குழுமத்தில் ஐ.டி ரெய்டு! 

பெரம்பலூர் அருகே தனியார் கல்விக் குழுமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம்

பெரம்பலூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்விக் குழுமத்தின் கீழ் சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்தக் கல்விக் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது மற்றும் வரி ஏய்ப்பு புகார் காரணமாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம்

அதன்படி, தமிழகம் முழுவதும் இந்தக் குழுமத்துக்குச் சொந்தமான 31 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. பெரம்பலூரில் மட்டும் 10 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், துறையூர் சாலை அருகே நடுவலூரில் உள்ள கல்லூரித் தாளாளர் சீனிவாசனின் வீடு மற்றும் அவரின் மருமகன்கள் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்விக் குழுமத்தின் கீழ் நடத்தப்படும் சிட் பண்ட் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. தஞ்சாவூர், சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம்

இதேபோல் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள சீனிவாசனின் மகன் கதிரவனுக்கு சொந்தமான வீடு, சமயபுரம் அருகில் உள்ள பொறியியல் கல்லூரி, உறையூர் சாலை ரோட்டில் உள்ள சிட்பண்ட்ஸ் மற்றும் உறையூர் சோழராஜபுரம் பகுதியில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடக்கும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த இடங்களைச் சுற்றிலும் கல்விக் குழும ஆதரவாளர்கள் நின்றுக்கொண்டு, பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுக்கக்கூடாது செய்தி சேகரிக்கக் கூடாது என மிரட்டில் விடுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்ந்து கதிரவன் அவரது மனைவி அனந்தலெட்சுமி ஆகியோரிடம் தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு சிறு கல்வி நிறுவனமாக இருந்த சீனிவாசன் நிறுவனம் கடந்த 16 வருடங்களில் பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக், கலைக்கல்லூரி என 16க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் என கல்விக் குழுமமாக வளர்ந்துள்ளது.  இந்நிலையில் திடீரென வருமான வரித்துறை சோதனை நடத்தியிருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.