"சட்டமன்றத்தில் தூங்கி விழுபவர்களுக்கு லட்ச ரூபாய் சம்பளமா? சத்துணவு ஊழியர்கள் ஆவேசம்

 சத்துணவு ஊழியர்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பாக ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு மறியல் போரட்டம் நடைபெற்றது.

பகுதி நேர அரசு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாகப் பணி நியமனம் செய்ய வேண்டும். தற்போது கொடுக்கப்பட்டு வரும் 1 லட்ச ரூபாய் பணிக் கொடையை 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். 8-வது ஊதியக் குழு சம்பள உயர்வுக்குப் பிறகு வழங்கப்படமால் நிலுவையில் உள்ள  21 மாத கால நிலுவைத் தொகையினை உடனே வழங்க வேண்டும். தற்போது ஒரு குழந்தைக்கு 1.80 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வரும் மானியத்தை 3 ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும். வரையறுக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் மறியல் போராட்டம் செய்தனர்.

 சத்துணவு ஊழியர்கள்

“சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்குத்தான் அரசு ஊதிய உயர்வினை வழங்கி வருகிறது. சட்டமன்றத்திற்குப் போய் தூங்கி விழுவதற்கு லட்ச ரூபாய் சம்பளமா? தமிழக முதலமைச்சர் உடனே எங்களுடைய சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தனர். இந்தச் சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சத்துணவு ஊழியர்களின் இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் சிறிது நேரம் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!