வெளியிடப்பட்ட நேரம்: 19:06 (15/02/2018)

கடைசி தொடர்பு:19:06 (15/02/2018)

ஓடும் ரயிலில் சினிமாப் பாணி குறுக்கு விசாரணை! வேட்டையாடு, விளையாடு! பகுதி -24 


                   போலீஸ்   இன்ஸ்பெக்டர் என்.நவீன், உதவி கமிஷனர் கே.ஆர்.விட்டல்ராமன் (ஓய்வு-அன்றைய பதவி)

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

... போலீஸ்  இன்ஸ்பெக்டர் நவீன் சார் சொன்னது போல் கதவுகளை 'லாக்' செய்து விட்டு, அக்யூஸ்ட்டுகளுக்கு 'ஹேண்ட் கப்' (கை விலங்கு) மாட்டத், தயாரானோம். அவர்களோ, இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து கதற ஆரம்பித்துவிட்டார்கள். 'சார், கொள்ளையடிக்கப் போன இடத்தில் பிரச்னை ஏற்பட்டு, அதனால் கத்தியை எடுத்ததாக, பலமுறை எங்களிடம் நாகபூஷணமே, சொல்லியிருக்கிறான். எங்களோடு  கொள்ளைக்கு வரும்போது அப்படி ஒருமுறை கூட நடக்கவில்லை, சார். நாங்கள் யாரையும் கொலை செய்ததில்லை, அவனையும் செய்ய விட்டதில்லை சார்...' என்றனர்....மெயின் இன்வெஸ்டிகேஷன் (பிரதான விசாரணை) முடிந்துவிட்டாலும், வெளியில் வராத ஏதோ ஒன்று இன்னும் இருக்கிறது என்ற எண்ணம், போலீஸ் உடுப்புக்குள் எப்போதும் ஒளிந்துகொண்டுதான் இருக்கும், நேரம் வாய்க்கும்போதெல்லாம் அதை, அடுத்த நிலை விசாரணை அதிகாரிகள், பயன்படுத்திக்கொண்டு, அக்யூஸ்ட்டுகளை திடீர் இன்ட்ராகேட் (குறுக்கு விசாரணை) செய்வார்கள். அப்படிச் செய்வதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். பிரதான விசாரணை அதிகாரி சற்று சோர்வாக இருக்கிறார், அவருக்கு ஓய்வு தேவை, உயர் அதிகாரி,  அக்யூஸ்ட்டுகளிடம் எல்லாவற்றையும் விசாரித்துக்கொண்டிருக்க முடியாது... இப்படிப் பல காரணங்களை அடுக்கலாம். அப்படி ஏதோ ஒரு காரண அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், ராஜ்குமார் ஆகியோர் அக்யூஸ்ட்டுகளைப் பார்த்து, 'இப்படி வாங்க, சார் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்' என்று ரயில் பெட்டியின் இன்னொரு பகுதிக்கு அவர்களைத் தள்ளிக்கொண்டு வந்தனர். சூழ்நிலையைப் புரிந்து கொண்ட நவீன் சார், ரயிலில் ஒரு ஓரமாக காலை நீட்டிப் படுத்துவிட்டார். ஆந்திராவுக்குப் போய்விட்டுத் திரும்பும் வரையில் அவர் உட்கார்ந்ததைக் கூட நாங்கள் அதியசமாகத்தான் பார்த்தோம், இப்போதுதான் முதல்முறையாக நீட்டிப் படுத்ததைப் பார்க்கிறோம்.

தனிப்படையை இயக்கிய  துணை கமிஷனர் ஏ.ஜி.மௌர்யா (ஓய்வு ஐ.ஜி) அப்போது எஸ்.ஐ.கள் ராஜ்குமார், பால்ராஜ் இருவரும், 'சின்ன சத்தம் வெளியில் கேட்டாலும், நீங்கள் தொலைந்தீர்கள், ம்ம்ம் சொல்லுங்க...  தனிப்பட்ட முறையில், நீங்கள் திருடப் போகும் போது நாகபூஷணம் போல் எதையும் செய்ததே இல்லையா? கொண்டித்தோப்பு போலீஸ் குவார்ட்டர்ஸில் கொள்ளையடித்த போது ஒரு ஹெட் கான்ஸ்டபிளை அசால்ட் பண்ணி விட்டுத்தானே கொள்ளை அடித்தீர்கள்? உங்கள் கைரேகை எங்களிடம் மாட்டிக் கொண்டிருக்கிறதே, யோக்கியன்களைப் போலவே பேசுகிறீர்களே... மாரேடிபூடி நாகபூஷணத்தை ஆந்திர போலீஸில் கொடுத்து விட்டு உங்களை மட்டும் வாங்கிக்கொண்டு வர நாங்கள் என்ன இளிச்ச வாயன்களா? நாகபூஷணத்தைக் கேட்டது போல் உங்களில் ஒருவனை, ஆந்திர போலீஸில் கேட்டிருந்தால் நாங்கள் கொடுத்திருக்கவே மாட்டோம், எங்களுக்கு நீங்கள் இரண்டு பேர்தான் தேவை. இந்த ரயில் சென்னைக்குப் போவதற்குள் அனைத்தையும் சொல்லி விட்டால், கோர்ட்  கொடுக்கும் தண்டனையோடு ஜெயிலுக்குப் போகலாம், தண்டனை காலத்தை முடித்துக்கொண்டு நிம்மதியாக வெளியில் வரலாம். திருந்தி வாழ்வதாக எங்களுக்கு உறுதியளித்தால், உங்களுக்கு ஏற்ற தொழில் ஒன்றை செய்ய அரசாங்கத்தின் மூலம் நாங்களே உதவியும் கேட்போம்... குடும்ப கஷ்டத்துக்காகத்தான் திருடினோம் என்று சொன்ன பழைய கதையோடு நிறுத்திக்கொள்ளுங்கள். திருடும்போது அசால்ட் ( ஆயுதங்களால் வெட்டுதல்) செய்ததை எங்களிடம் மறைக்க நினைத்தால் விவகாரத்தில்        மாட்டிக்கொள்வீர்கள்' என்றனர்.

தனிப்படை எஸ்.ஐ. ராஜ்குமார் (இன்று- இன்ஸ்பெக்டர்)'சார், நீங்கள் சொல்வதுபோல் போலீஸ் குவார்ட்டர்ஸில் திருடும் போது ஒருமுறை கூட எங்களை யாரும் பார்த்தது இல்லை. திருடும்போது எங்களை யாராவது தடுத்திருந்தால், ஒருவேளை எங்களுடன் இருந்த நாகபூஷணம், ஏதாவது செய்யப் பார்த்திருப்பான். அப்படி எதுவும் நடக்கவில்லை. திருடி விட்டு ரயிலில் போகும்போது, இரண்டாவது ஸ்டேஷனில் ஒருமுறை இறங்கினோம். அப்போது எங்களிடமே நகை பறிக்க இரண்டு பேர் முயற்சி செய்தனர். கையில் இருந்த இரும்பு உளியால், அவர்கள் தலையில் ஓங்கி அடித்தோம். மயங்கி விழுந்து விட்டார்கள். அவர்களிடமிருந்தே மோதிரம், செயின், பர்ஸ்களை எடுத்துக்கொண்டு போய் விட்டோம், இது மட்டும்தான் சார் நடந்தது' என்றனர். அக்யூஸ்ட்டுகள் குறிப்பிட்ட இரண்டாவது ஸ்டேஷன் எங்கே வருகிறது என்பதை கான்ஸ்டபிள்கள் குறித்துக்கொண்டு, அது எந்த மாதம் நடந்தது என்பதையும் அவர்களிடமே கேட்டு வாங்கிக்கொண்டனர். குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தும்போது, இதுபோன்ற விஷயங்களையும் கூர்ந்துகவனித்தால், பல வழக்குகளின் முடிச்சுகள் அவிழும் என்பது நாங்கள் கற்றுக்கொண்ட அன்றையப் பாடமாக இருந்தது. சில நிமிடங்கள் அக்யூஸ்ட்டுகளை உட்காரவைத்து விட்டு, ஜன்னலைப் பார்த்தோம். சென்னையை ரயில் நெருங்கிக்கொண்டிருந்தது, சுவர்களில் இருந்த தமிழ் விளம்பரங்கள் மூலம்  தெரிந்தது... இன்ஸ்பெக்டரை எழுப்பிவிட நினைத்து அவர் பக்கம் திரும்பினோம். அவரோ, பேஜரில் எதையோ டைப் செய்துகொண்டிருந்தார். கால் நீட்டிப் படுத்தவர், தூங்கவில்லை என்று தெரிந்தது. விசாரணை நேரம் தவிர மற்ற நேரங்களில் பேஜரோடு கிடக்கிறாரே என்று யோசித்தபடி ஜன்னல் வழியே ஊடுருவிய சென்னைக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்தோம். ரயில் நடைமேடையின் ஜன்னல் வழியே இடதும், வலதுமாக மனிதர்கள் வேகமாகக் கடந்தபடி இருந்தனர்.

 

                               தனிப்படையில் இடம்பெற்ற முதல்நிலைக் காவலர் ஜி.லோகநாதன்(இன்று ஓய்வு எஸ்.ஐ)

நடைமேடை மனிதர்களின் நடை வேகம் குறையக் குறைய கம்பிகளுக்கும், எங்கள் பெட்டிக்கும் வெளியே சென்னை ஸ்பெஷல் டீம் போலீஸார் நின்றதைப் பார்த்தோம். சிங்கக்குட்டிகள் போல் ரயில் பெட்டிக்குள் பாயத் தயாராக இருந்தனர். அந்த வரிசையில் ஒரு இன்ஸ்பெக்டரும் காத்திருந்தார். இரண்டாவது ஸ்டேஷனில் ரயில்,  நின்றபோது 'அசால்ட்' செய்ததாக அக்யூஸ்ட்டுகள் குறிப்பிட்ட லிமிட் போலீஸ் இன்ஸ்பெக்டர்தான் அவர். நவீன் சார் பேஜரில் பார்த்த வேலைதான் இது என்பதைப் புரிந்துகொண்டோம். ரயிலை விட்டு, அக்யூஸ்ட்டுகளுடன் கீழே இறங்கினோம்.'நேராக டி.சி. ஆபீஸ் போயிடுவோம், அங்கிருந்து என்ன உத்தரவு வருகிறதோ, அப்படிச் செய்து கொள்ளலாம்' என்று நவீன் சார், சொல்ல, அதை ஆமோதித்தபடி அவர் பின்னால் நடக்க ஆரம்பித்தோம். துணை கமிஷனர் மௌர்யா சாருடன் உதவி கமிஷனர் கே.ஆர். விட்டல்ராமன் சாரும் அங்கே எங்களை வரவேற்கக் காத்திருந்தனர். எங்களுக்குச் சிறப்பான வரவேற்பும், பாராட்டும் கிடைத்தது. பின்னர் அங்கிருந்து அக்யூஸ்ட்டுகளுடன் கமிஷனர் அலுவலகம் போனோம். சென்னை போலீஸ் கமிஷனர் கே.விஜயகுமார் சாருடன் வடக்கு போலீஸ் இணை கமிஷனர் சைலேந்தர்பாபு சாரும் அங்கே காத்திருந்தனர். கமிஷனரும், ஜே.சி. யும் எங்கள் டீமில் இருந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பாராட்டி கை குலுக்கினர். விசாரணை, ரெக்கவரி விவரங்களை நவீன் சார், முன்னரே உயரதிகாரிகளுக்குத் தகவலாக அனுப்பியிருந்தாலும், மீண்டும் ஒருமுறை அவற்றை மனப்பாடமாக ஒப்பித்தார். சம்பிரதாய சடங்கு என்பார்களே, அது போலீஸிலும் உண்டு. அந்தச் சடங்குகளை முடித்துக்கொண்டு அக்யூஸ்ட்டுகளுடன் கோர்ட்டுக்குப் போனோம். கோர்ட் உத்தரவுப்படி அவர்களை சென்னை மத்திய சிறையில் அடைத்தோம். நாங்களும் கொஞ்சம் சுதாரிக்க, பெருமூச்சு விட்டுக்கொள்ள ஒரு இடைவெளி தேவைப்பட்டது. அதற்குப்பின் அக்யூஸ்ட்டுகளைக் காவலில் எடுத்தோம், மீண்டும் விசாரித்தோம். பிடிபட்ட இருவருமே கொடுங் குற்றவாளிகள் என்பதால், அவர்களை ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க கமிஷனர் விஜயகுமார் உத்தரவிட்டிருந்தார். அவர்களும் ஓராண்டு சிறைக்குப் போனார்கள், பின்னர் தவறுக்கான தண்டனையையும் பெற்றனர்.

                           தனிப்படையை வழிநடத்திய பிரதான காவல் தலைமை

 'வேட்டையாடு, விளையாடு' தொடரின் முதல் புலனாய்வுக் கட்டுரையான இதை சரியான பாதையில் கொண்டு செல்ல 25 அத்தியாயத்திலும் என்னோடு பேசிக்கொண்டே இருந்த ஓய்வு எஸ்.ஐ. ஜி.லோகநாதனின் நினைவாற்றல் அபாரம். அவ்வப்போது என் சந்தேகங்களைத் தீர்த்து வைத்த ஓய்வு உதவி கமிஷனர் என். நவீன் சந்திரா நாகேஷ், தற்போது பெங்களூரில் வசிக்கும் ஓய்வு பெற்ற கூடுதல் துணைக் கமிஷனர் கே.ஆர். விட்டல் ராமன் ஆகியோர் கட்டுரையின் போக்கை, ஸ்பெஷல் ஆபரேஷன் போல் தீர்மானித்தவர்கள். சென்னைக் காவலர் குடியிருப்புகளை மட்டும் குறிவைத்து  வெள்ளிக்கிழமைகளில் மட்டும் கொள்ளையை நிறைவேற்றிய கும்பல் யார் என்று கண்டுபிடித்தது ஒரு சாதனை. ஆந்திராவிலிருந்த அந்தக் கும்பலைத் தேடி மலை, காட்டுப் பகுதிகளில் தங்கிக் கிடந்தது ஒரு சாதனை... உயிரைப் பணயம் வைத்து அவர்களைப் பிடித்தது, கொள்ளைபோன தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்களை கொஞ்சமும் விட்டு வைக்காமல் சென்னைக்குக் கொண்டு வந்து உரியவர்களிடம் ஒப்படைத்தது, குற்றவாளிகளுக்கு எதிரான ஆவணங்களைத் திரட்டி அவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனையை வாங்கிக்கொடுத்தது அடுத்தடுத்த சாதனைகள். அன்றைய தொழில் நுட்பக் கருவியான பேஜர் கருவியை மட்டுமே பயன்படுத்தி, இதை சாதிக்க முடிந்தது இமாலய ஒரு சாதனை... இத்தனையும் சாதிக்க வேறென்ன கூடுதல் தகுதிகள் தேவை?  ஸ்பெஷல் டீமின் முதல் நிலைக் காவலராய் அன்றிருந்த ஜி.லோகநாதன் (இன்று ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்) தன்னுடைய 35 ஆண்டுகால காவல் பணி அனுபவத்திலிருந்து அடுத்த தலைமுறைக்கு என்ன சொல்கிறார் ?

(தொடரின் இந்தப் பகுதி அடுத்த பகுதியில் நிறைவு பெறும்..)


டிரெண்டிங் @ விகடன்