கோயிலில் ஏன் குடிக்கிறீர்கள் எனக் கேட்டவர்களுக்கு ரவுடிகளால் நடந்த கொடூரம்!

கோயிலில் மது குடித்தவர்களை தட்டிக் கேட்டதால் ஒருவர் கொலை செய்யப்பட்டார். பலத்த காயமடைந்த இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்டம், தும்பல் அருகே ஐயம்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி வந்து அங்கிருந்த பிள்ளையார் கோயிலில் குடித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து, பொது இடத்தில் குடிக்கிறீர்களே நியாயமா? என்று கேட்டவர்களை வீடு புகுந்து சரமாரியாக வெட்டியும், இதை கண்டு அலறித் துடித்த மனைவியின் வாயைக் கிழித்தும் அட்டூழியம் செய்திருக்கிறார்கள் ரவுடிகள். இதில் பாலசுப்பிரமணி என்பவர் மரணமடைந்தார். நடராஜன் உயிருக்குப் போராடி வருகிறார். பார்வதி என்ற பெண் சேலம் அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்கள்.

இதைப்பற்றி தும்பலைச் சேர்ந்த ஜோதி, ' சார் நாங்க சேலம் மாவட்டம் தும்பல் ஐய்யம்பேட்டையில் இருக்கிறோம். ஐய்யம்பேட்டை விநாயகர் கோயில் அருகே தமிழக அரசு டாஸ்மாக் கடை இருக்கிறது. அந்தக் கடையிலிருந்து 3 பேர் மது வாங்கிக் கொண்டு விநாயகர் கோயிலில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தார்கள். நடராஜன், பாலசுப்பிரமணி ஆகியோர் கோயிலுக்குக் குழந்தைகள், பெண்கள் வருவாங்க. இங்கு குடிக்கிறீங்களே என்று கேட்டார்கள். அதற்கு அந்த மூன்று பேரும் வாய்க்கு வந்தார் போல கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டினார்கள். நடராஜனும், பாலசுப்பிரமணியும் அமைதியாக வந்து விட்டார்கள். மீண்டும் இரவு 9 மணிக்கு மதுக் குடித்த 3 பேரும் 10 பேரை ஒரு ஜீப்பில் கூட்டி வந்து பாலசுப்பிரமணியத்தை சூரி கத்தியால் துண்டு துண்டாக வெட்டியும், நடராஜனை வயிற்றில் குத்தினார்கள். இதைப் பார்த்துக் கதறிய நடராஜன் மனைவி பார்வதியின் வாயை கத்தியால் கிழித்தும் போட்டு விட்டு போய் விட்டார்கள். இதில் பாலசுப்பிரமணி மருத்துவமனைக்கு வரும் வழியில் மரணமடைந்தார். நடராஜனும், அவரது மனைவி பார்வதியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

பாலசுப்பிமணியின் மனைவி ஜானகி, இவர்களுக்கு சுஷ்மிதா, கீர்த்திகா, சசிகுமார் என்று 3 பிள்ளைகளும், நடராஜன் பார்வதி தம்பதிகளுக்கு மரகதம், பிரியா, சபரி 3 பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் கத்திக் கதறுவதை பார்க்கும் போது இது நாடா இல்லை சுடுகாடா என்று தெரியவில்லை'' என்று ஆதங்கப்பட்டார்.

தும்பலிலிருந்து வந்திருந்தவர்கள், ''மது அருந்தியவர்கள் இளையரசன், அவரது அண்ணன் சிலம்பரசன் இவர்கள் பெரிய ரவுடிகள். இவர்கள் மீது, கொலை, ஆட்கடத்தல், பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்தல் வழக்கு இருக்கு. இளையரசன் ஜாமீனில் வெளியே இருக்கிறான். இவர்கள் பெயரைச் சொன்னால் கூட எங்களைக் கொன்றுவிடுவார்கள். தும்பல் காவல்துறையும் ரவுடிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். எங்க பகுதி சேலம் மாவட்ட எல்லையாகவும், மலையடிவாரப் பகுதியாகவும் இருப்பதால் எந்த அதிகாரியும் கண்டுக்கொள்ள மாட்டார்கள்'' என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!