வெளியிடப்பட்ட நேரம்: 22:10 (15/02/2018)

கடைசி தொடர்பு:22:10 (15/02/2018)

“பணி மாறுதல் கொடுங்கள்..இல்லையேல் தற்கொலைக்கு அனுமதியுங்கள்!”- ஆசிரியர் அளித்த பரபரப்பு மனு

தூத்துக்குடி மாவட்டம் தொடக்கக் கல்வித்துறை சார்பில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தற்காலிக பணி ஆணையை ரத்து செய்யப்பட்டது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் தற்கொலை செய்துகொள்ள அனுமதி தருமாறு கேட்டு ஆட்சியரிம் மனு அளித்து பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் செல்வக்குமார். 

selvakumar - teacher thoothukudi

ஆசிரியர் செல்வக்குமாரிடம் பேசினோம், “ தூத்துக்குடி மாவட்டத் தொடக்க கல்வித்துறையில் கடந்த 2017 மே  மாதம் 25-ம் தேதி நடைபெற்ற ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வில் மிகப்பெரிய அளவிலான முறைகேடு நடைபெற்றது. பாலியல் குற்றச்சாட்டிற்காக தண்டனை பெற்ற ஸ்ரீவைகுண்டத்தைச் தேர்ந்த ஒரு ஆசிரியருக்கு அவரது வீட்டின் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு பணி மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. பணியில் மிகவும் இளையோரான தூத்துக்குடியைச் சேர்ந்த இன்னொரு ஆசிரியைக்கும் அவரது வீட்டின் அருகில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு பணிமாறுதல், ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதைப் போல பணிமாறுதல் விதிமுறைகள் மீறி பணிமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பணிமாறுதலுக்கு முழுத் தகுதி பெற்ற எனக்கு பணி மாறுதல் தடுக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் 5 முறை திங்கள்கிழமை மக்கள் குறை தீர் கூட்டத்தில் மனு அளித்துள்ளேன். அதன் மூலம் விசாரணைக்கு அழைக்கப்பட்டு எனது கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கடிதமும் அனுப்பப்பட்டது. ஆனாலும், எனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. என்னைப்போல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இணைந்து 4 நாட்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். அதன் பிறகு, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தற்காலிகப் பணி ஆணை வழங்கப்பட்டது. ஆனால், சில நாட்களிலேயே எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அந்த ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

பணிமாறுதலுக்கு முழுத்தகுதி உள்ள எனக்கு பணிமாறுதல் வழங்கிடாமல் காலம் தாழ்த்தி வருவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே எனக்கு தற்கொலை செய்துகொள்ள அனுமதி தரவேண்டும் என ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன். என்னுடைய தற்கொலைக்குப் பிறகு, இது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செளந்தரநாயகி மற்றும் அலுலக ஊழியர்கள் மீதும் இந்த அரசு நடவடிக்கை எடுத்து, என்னைப் போல் பாதிக்கப்பட்டுள்ள தகுதியான ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் ஆணை வழங்கிட வேண்டும்” என்றார்.

   

நீங்க எப்படி பீல் பண்றீங்க