வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (15/02/2018)

கடைசி தொடர்பு:22:30 (15/02/2018)

பதிவுத்துறை தலைவருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி  உத்தரவு!

ஆன்லைன் பத்திரப்பதிவை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த தற்போதைய நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவை அளித்தார். அந்த மனுவில் "பத்திரப்பதிவு செய்யப்படும் சொத்து, சொத்துக்கு உரிமைப்பட்டவர்கள்  உள்ளிட்ட பல்வேறு விவரங்களை  இணையதளத்தில் உள்ளுருவாக்கம்  பதிவேற்றம் செய்வது சார்பதிவாளரின் கட்டாய பணியாகும். இந்தப்  பணியை பத்திர எழுத்தர்களிடமோ,  வேறுநபர்களிடமோ ஒப்படைக்கக்கூடாது  என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவு இதுவரை  நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே,  பதிவுத்துறை தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்"  எனக் கூறியிருந்தார்.

கடந்த 12-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும்  ஆன்லைன் பத்திரப்பதிவு முழுவதுமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு  நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஆன்லைன் பத்திரப்பதிவு முறை தற்போது நடைமுறையில் உள்ள நிலையில், அதனை மேம்படுத்த பல நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஐ.ஐ.டி பேராசிரியர் குழுவின் ஆலோசனையும் பெறப்பட்டு வருகிறது” எனத்  தெரிவித்தார். இதையேற்ற நீதிபதிகள், ஆன்லைன் பத்திரப்பதிவை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த தற்போதைய நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.