நிர்வாணப்படுத்தித் தாக்குதல்..! போலீஸாரைக் கண்டித்து திருச்சியில் கொந்தளித்த மக்கள் | People Protest against police violence

வெளியிடப்பட்ட நேரம்: 23:34 (15/02/2018)

கடைசி தொடர்பு:23:34 (15/02/2018)

நிர்வாணப்படுத்தித் தாக்குதல்..! போலீஸாரைக் கண்டித்து திருச்சியில் கொந்தளித்த மக்கள்

வாகனச் சோதனை என்கிற பெயரில் திருச்சி போலீஸார் ஆவணங்கள் இருந்தும் வசூல் வேட்டை நடத்துவதாகக் குற்றம் சாட்டி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் அதிகாரம்

உய்யக்கொண்டான் திருமலை அருகிலுள்ள செங்கதிர்ச்சோலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். எம்.டெக். பட்டதாரியான இவர், தனது நண்பர் பொறியியல் பட்டதாரி பாலசந்திரனை அழைத்துக் கொண்டு திருச்சி - வயலூர் சாலையில் கடந்த 11-ம் தேதி இரவு புத்தூர் பகுதிக்கு வந்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பி சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவரது வாகனம், வயலூர் சாலையிலுள்ள காவல் சோதனைச் சாவடி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு நின்றுகொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் கோபால், மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஹெல்மெட் அணியாமல் வந்தது குறித்தும், ஓட்டுநர் உரிமம் குறித்தும் கேட்டுள்ளார்.

அதற்கு ஆவணங்கள் அனைத்தும் வீட்டில் இருப்பதாகக் கூறிச்சென்று, அவற்றை கையோடு எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் எஸ்.ஐ கோபால், அபராதத் தொகை கட்டிதான் தீரவேண்டும் என அவர்களிடம் பிரச்னை செய்துள்ளார். அதனைத் கேட்ட இருவரையும் எஸ்.ஐ கோபால் தாக்கியுள்ளார்.

இதையடுத்து தாக்குதலுக்கு பயந்த சந்தோஷ்குமார் மற்றும் பாலகுமாரன் ஆகியோர் அங்கிருந்து ஓடியதால் மற்ற போலீஸார் அவர்களைத் துரத்திச் சென்று தாக்கினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கேட்டதற்கு, அந்த இளைஞர்களைத் தீவிரவாதிகள் எனச் சித்தரித்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கேட்டபொழுது போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சாலைமறியல்வரைச் சென்றது. இறுதியாக இளைஞர்களைத் தாக்கிய போலீஸ் எஸ்.ஐ கோபால் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த நினைத்த போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மக்கள் அதிகார அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள், தாக்குதல் நடத்திய போலீஸ் எஸ்.ஐ கோபாலை பணி நீக்கம் செய்யவேண்டும், நள்ளிரவில் தாக்குதலில் ஈடுபட்ட உறையூர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்ப பெற வேண்டும், நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவச் சிகிச்சை இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்தப் பிரச்னை குறித்து போராட்டக்காரர்கள், “எல்லா ஆவணங்கள் இருந்தும் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியதும், அசிங்கமாகத் திட்டி, வழிப்பறி செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து நியாயம் கேட்ட பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தப் பிரச்னைக்கு சம்பந்தமில்லாதவர்களை, 10-க்கும் மேற்பட்ட போலீஸார் அத்துமீறி வீடுபுகுந்து இழுத்துவந்து, வீதியில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.  பெண்களையும் முதியவர்களையும் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர். மேலும் 10 பேரை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி, உறையூர் காவல் நிலையத்தில் வைத்து நிர்வாணப்படுத்தி லத்தியாலும் பூட்ஸ் காலாலும் மிதித்து சித்ரவதை செய்துள்ளனர். அதில் தேவேந்திரன் என்பவரின் இடதுகால் முட்டி உடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். பலர் கடுமையாக காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்கள்.