வெளியிடப்பட்ட நேரம்: 00:21 (16/02/2018)

கடைசி தொடர்பு:00:21 (16/02/2018)

முன்னாள் எம்.எல்.ஏ ஜான் ஜேக்கப் மரணத்துக்கு காரணம் என்ன? விசாரணையை முடுக்கும் போலீஸ்

சந்தேகத்துக்கு இடமான முறையில் மரணம் அடைந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான ஜான் ஜேக்கப் விவகாரம் தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. அவரது மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மாவட்ட எஸ்.பி அறிவித்துள்ளார்.

ஜான் ஜேக்கப்

குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ஜான் ஜேக்கப். கருங்கல் அருகே உள்ள படூவூர் கிராமத்தைச் சேர்ந்த அவர், ஜீ.கே மூப்பனாரின் தீவிர விசுவாசி. இவர் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் குமரி மாவட்டத் தலைவராகச் செயல்பட்டு வந்தார். கடந்த 13-ம் தேதி வீட்டில் இருந்தவர் திடீரென வாந்தி எடுத்ததுடன், மூச்சுத் திணறலால் அவதிப்பட்டதால் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

நெய்யூர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரது உடல் நாகர்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதனிடையே, ஜான் ஜேக்கப்பின் மகனான டாக்டர் நவின் சைமன், தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்தார். அதனால் கருங்கல் போலீஸார் 174-வது பிரிவில் (சந்தேக மரணம்) வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே, அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில், அவரது உடலில் விஷம் இருந்தது தெரிய வந்துள்ளது. அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதற்கான காரனம் என்ன என்பது தெரியவில்லை. குடும்பத் தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கிறார்கள். அதனால் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து  குமரி மாவட்ட எஸ்.பி-யான ஸ்ரீநாத் கூறுகையில், ’’ஜான்ஜேக்கப் உடலில் விஷம் இருப்பது தெரிய வந்திருப்பதால் அவர் தற்கொலை செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளோம். குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கக் கூடும் என்கிற சந்தேகம் ஏற்பட்டு இருப்பதால், அவரது குடும்பத்தினரிடமும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.