கல்லூரி மாணவிகள் நிகழ்த்திக் காட்டிய சமூக விழிப்பு உணர்வு நிகழ்ச்சி..!

நெல்லையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, விவசாயிகள் தற்கொலை, வழிப்பறி, சாலை விபத்து ஆகியவற்றை மகளிர் கல்லூரி மாணவிகள் தத்ரூபமாக நடித்துக்காட்டிய நிலைக்காட்சி நடைபெற்றது.

நிலைக்காட்சி

பாளையங்கோட்டையில் உள்ள தூய இன்னாசியார் கல்வியியல் கல்லூரி மாணவிகள் விழிப்பு உணர்வு நிலைக்காட்சி நிகழ்ச்சியை நிகழ்த்திக் காட்டினார்கள். மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளான பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, விலைவாசி உயர்வு, செயின் பறிப்பு சம்பவங்கள், விவசாயிகள் தற்கொலை, மதுகடைகளால் ஏற்படும் சிக்கல்கள், சாலை விபத்து உள்ளிட்டவற்றை மாணவிகள் தத்ரூபமாக நடித்துக்காட்டினார்கள். 

கல்லூரி மாணவிகள் 200 பேர் ஐந்து குழுக்களாகப் பிரிந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், கட்டாயத் திருமணம், பெண்சிசு கொலை, வரதட்சணைக் கொடுமைகள் உள்ளிட்டவற்றை நடித்துக் காட்டினார்கள். வறட்சி, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தற்கொலை சம்பவம், வழிப்பறிச் சம்பவங்கள் ஆணவப் படுகொலைகள், பதுவின் தீமைகள் ஆகியவை குறித்து மாணவிகள் நிகழ்த்திய காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. 

இது பற்றிப் பேசிய கல்லூரி மாணவிகள், ‘’பொதுமக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிலைக்காட்சியை நடித்துக் காட்டினோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடந்து வருகின்றன. அதுவும் மது போதையால் அநேக குற்றங்கள் நடக்கின்றன. ஆணவக் கொலைச் சம்வங்கள் நடக்கின்றன. இது குறித்து விழிப்பு உணர்வு ஏற்படும் வகையில் இந்த நிகழ்ச்சியை நடித்துக் காட்டினோம்’’ என்றார்கள். இந்தக் காட்சிகளை பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!