வெளிநாட்டில் பலியான மீனவர் உடலை மீட்டுக் கொண்டு வரக் கோரி பச்சிளம் சிசுவுடன் திரண்ட உறவினர்கள்! | Relatives gathered to bring the fisherman's body to bring the fisherman's body abroad.

வெளியிடப்பட்ட நேரம்: 02:40 (16/02/2018)

கடைசி தொடர்பு:13:27 (17/08/2018)

வெளிநாட்டில் பலியான மீனவர் உடலை மீட்டுக் கொண்டு வரக் கோரி பச்சிளம் சிசுவுடன் திரண்ட உறவினர்கள்!

ஓமன் நாட்டில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகு வெடித்து சிதறியதில் உயிரிழந்த மீனவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக் கோரி பால் மணம் மாறா பச்சிளம் குழந்தைகளுடனும், பிறந்து ஒரு மாதமே ஆன சிசுவுடனும் ஆட்சியர் அலுவலகத்தில் மீனவரின் உறவினர்கள் திரண்டனர்.

ஓமனில் பலியான மீனவர் உடலை மீட்டு தர கோரி உறவினர்கள் திரண்டனர்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே புதுக்குடி கிராமத்தில் வசித்து வந்த முனீஸ்வரன் மகன் காட்டுமந்திரி (33). இவர் மீன்பிடி ஒப்பந்தக் கூலித் தொழில் செய்ய ஓமன் நாட்டுக்கு சென்று அங்கு மீன்பிடி தொழில் செய்து வந்தார். ஓமன் நாட்டில் மசீரா தீவுப் பகுதியில் தங்கி இருந்து மீன்பிடித் தொழில் செய்து வந்த இவர் கடந்த 13-ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகிலிருந்த பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. இதனை சரிசெய்வதற்குள் படகு வெடித்து  சிதறியதில் காட்டுமந்திரியின் உடலும் சிதறி கடலுக்குள் விழுந்துள்ளது. மேலும் அதே படகில் சென்ற மற்றொரு மீனவரான கனி என்பவரது இரு கால்களும் சேதமாகிய நிலையில் ஓமனில் உள்ள மஸ்கட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். படகில் இருந்த மேலும் இரு மீனவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பி விட்டனர்.

மீனவர் காட்டுமந்திரிக்கு 2 மற்றும் 1 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவி ராமதேவிக்கு  ஒரு மாதத்திற்கு முன்புதான்  ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் நடந்த படகு விபத்தில் கணவனை பறிகொடுத்த  ராமதேவி உயிரிழந்த தனது கணவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக்கோரி மனு அளிக்க பால் மணம் மாறா பிஞ்சு குழந்தைகளுடனும், பிறந்து ஒரு மாதமே ஆன சிசுவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். 

ராமதேவி மற்றும் அவரது உறவினர்களும் விபத்தில் கால்களை இழந்த கனியின்  உறவினர்களும் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அம்மனுவில்  உயிரிழந்த மீனவர் காட்டுமந்திரியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதுடன், விபத்தில் சிக்கிய மீனவர்களின் குடும்பத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். உயிரிழந்த மகனை நினைத்து கண்ணீர் விட்ட காட்டுமந்திரியின் தாய் தேவி, சித்தி பூங்கொடி ஆகியோர் மனு கொடுக்க வந்த போது மயங்கி சரிந்தனர். உடன் வந்திருந்த உறவினர்கள் அவர்கள் இருவரையும் மயக்கத்திலிருந்து மீட்டு அங்கிருந்து அழைத்து சென்றனர்.