வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (16/02/2018)

கடைசி தொடர்பு:04:00 (16/02/2018)

விஸ்வரூபம் எடுக்கும் பல்கலைக்கழக ஊழல் விவகாரம்..!

உயர் கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் தமிழத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் மற்றும் பதிவாளர்களை  அவரவர் பல்கலைக்கழகத்தின் அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு நாளை சென்னை தலைமைச் செயலகத்திற்கு வரச் சொல்லி இருப்பது பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுப்பற்றி கல்வியாளர்களிடம் கேட்டப்போது, ''தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களை உயர் கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் வரச் சொல்லி இருப்பது பல்கலைக்கழகங்களில் நடக்கும் ஊழலை அழிப்பதற்கு அல்ல.  இந்த ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளுவதற்கே இந்தக் கூட்டத்தை உயர் கல்வித்துறை செயலாளர் தலைமையில் கூட்டப்பட்டிருக்கிறது.  

ஏனென்றால் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு  முதல் பல்கலைக்கழகத்தில் டீக்கடை வைப்பது வரை ஊழல் புரையோடி கிடக்கிறது. சமீபத்தில் மாநில அரசு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் படி ஊழலில் முதல் இடத்தில் இருப்பது சேலம் பெரியார் பல்கலைக்கழகம். அதைத் தொடர்ந்து கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் இப்படி வரிசையாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஊழல் ஊற்றெடுத்து பாய்கிறது.

தற்போது ஊடகங்கள் பல்கலைக்கழகத்தின் ஊழல்களை வெளியிட்டு வருவதால் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது இந்தப் பிரச்னை. இதை தமிழக கவர்னர் விசாரித்தால் உயர் கல்வித்துறை அமைச்சர், உயர் கல்வித்துறை செயலாளர் முதற்கொண்டு விசாரிக்கப்படுவார்கள். பல்கலைக்கழகங்களுக்கு பல கோடிகள் கொடுக்கும் மத்திய அரசியின் கவனத்திற்கு மத்திய உளவுத் துறை கொண்டு சென்றால் தமிழக ஆட்சிக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதைத் தவிர்க்கவே இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்'' என்றார்.