கல்லூரிப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே 2 கல்லூரி மாணவர்கள் பலி..!

கோவில்பட்டியில் தனியாா் கல்லூாி பேருந்து பைக் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 2 கல்லூரி மாணவா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டியைச் சேர்ந்த சேது முனீஸ்வரன் மற்றும் எட்டயபுரத்தைச் சேர்ந்த ராஜகுரு ஆகிய இருவரும் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இருவரும் நண்பர்கள். கல்லூரி முடிந்து ஒன்றாகவே பைக்கில் செல்வது வழக்கம். நேற்று மாலை வழக்கம் போல கல்லூரி முடிந்து வீட்டிற்கு பைக்கில் கிளம்பினர். பைக்கை ராஜகுரு ஓட்டி வந்துள்ளார். கோவில்பட்டியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டில் இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே ஒரு தனியார் கல்லூரிப் பேருந்து வந்து கொண்டிருந்தது.

எதிரே வந்தப் பேருந்து இந்த 2 மாணவர்கள் சென்ற பைக்கில் மோதியது. இந்த விபத்தில் சேதுமுனீஸ்வரன் மற்றும் ராஜகுரு ஆகிய இரு மாணவர்களும் பேருந்தின் முன்பக்க சக்கரத்திற்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசார், இருவரது உடலைக் கைபற்றி கோவில்பட்டி தலைமை அரசு மருத்துமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்திருந்தால் மாணவர்களை காப்பாற்றி இருக்கலாம் எனக்கூறி ஆத்திரமடைந்த மற்ற மாணவர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் மருத்துவமனை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதே போல, கோவில்பட்டி முத்துநகரைச் சேர்ந்த லோகேஷ் என்ற, அதே தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3 ஆண்டு பயின்று வந்த மாணவர், கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, தோணுகால் விலக்கு அருகே மற்றொரு தனியார் கல்லூரிப் பேருந்து, பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில் காயம் அடைந்தார்.

இரு விபத்து குறித்தும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கல்லூரியைச் சேர்ந்த இருமாணவர்கள் உயரிழந்தும், ஒரு மாணவர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!