வெளியிடப்பட்ட நேரம்: 08:08 (16/02/2018)

கடைசி தொடர்பு:08:08 (16/02/2018)

சினிமா பட பாணியில் நகராட்சி ஊழியர் கடத்தல்! - விரட்டிப் பிடித்த போலீஸ்

திருச்சி நகராட்சி பெண் ஊழியர் கடத்தல் சம்பவத்தில் குற்றவாளிகளைத் திருச்சி போலீஸார் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்து அசத்தியுள்ளனர். 

கடத்தல்

திருச்சி மாவட்டம் துவாக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி புவனேஷ்வரி, கணவரை இழந்தவர்.  தனியாக வசித்து வருவதுடன், துவாக்குடி நகராட்சியில் கிளர்க்காகப் பணியாற்றுகிறார். இந்நிலையில் நேற்று மாலை பணிகளை முடித்துவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவர், நடந்து சென்றுகொண்டிருந்தார். அலுவலகத்திலிருந்து சிறிது தூரத்தில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது, புவனேஷ்வரி நடந்துசென்றுகொண்டிருந்தார்.  அப்போது அங்கு டாடா சுமோ காரில் வந்த ஒரு கும்பல், புவனேஷ்வரியை வலுக்கட்டாயமாக தூக்கியதுடன், அப்படியே அவரை காரிக்குள் இழுத்து சென்று, காரை இயக்கினர். புவனேஷ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்தனர். ஆனாலும், அவர்களால் காரை பிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து துவாக்குடி இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸார் மற்றும் பொதுமக்கள், சிலர் தங்களது கார்களில் அந்தக் காரை விரட்டினர். நகராட்சி ஊழியரை காரில் கடத்திவிட்டார்கள் என்பதால் அந்த ஏரியாவே பதற்றமானது. அடுத்து அந்தக் கடத்தல் காரினை துவாக்குடி அடுத்துள்ள மலைக்கோயில் அருகே போலீஸார் விரட்டிப் பிடித்தனர்.  இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது புதுக்கோட்டை மாவட்டம் உசிலங்குளத்தைச் சேர்ந்த அசோக் என்கிற முனீஸ்வரன், காந்திநகரைச் சேர்ந்த மனோ, தீபன் சக்ரவர்த்தி,அயனாவரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் ஆகியோர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த  நான்கு பேரையும் கைது செய்த போலீஸார், கடத்தப்பட்ட நகராட்சி ஊழியர் புவனேஷ்வரியை மீட்டனர்.Buvana

தொடர்ந்து போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தனிமையில் வசிக்கும் புவனேஷ்வரிக்கு அவரின் சகோதரி சரஸ்வதி குடும்பத்தினர் உதவியாக இருந்து வந்தனர். அதில் சரஸ்வதியின் கணவர் மதுரை வீரனுக்கும் புவனேஷ்வரிக்கும் தொடர்பு இருந்து வந்திருக்கிறது. இதுகுறித்துப் பலமுறை கண்டித்தும் புவனேஷ்வரி கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து சரஸ்வதி, தனது சகோதரி புவனேஷ்வரியை கடத்தச் சொல்லி அவரது உறவினரான அசோக்கிடம் கேட்டதாகவும், அதனடிப்படையிலேயே அசோக் தலைமையிலான இந்தக் கும்பல், புவனேஷ்வரியை காரில் கடத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க