வெளியிடப்பட்ட நேரம்: 08:54 (16/02/2018)

கடைசி தொடர்பு:11:05 (16/02/2018)

மௌனம் காக்கும் மத்திய மாநில அரசுகள்! அடுத்தகட்ட போராட்டத்துக்குத் தயாராகும் நெடுவாசல்

நெடுவாசல் கிராமத்தில் கடந்த ஆண்டு இதே நாள் (16.02.2017) ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் பெருந்திரளாக மக்கள் கூடி, போராட்டத்தைத் தொடங்கினார்கள். இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. ஆனாலும், மௌனம் கலைக்காத மத்திய - மாநில அரசுகளால் வெறுத்துப்போன அந்தப் பகுதி மக்கள், மீண்டும் அடுத்தக்கட்ட போராட்டத்திற்குத் தயாராகி விட்டார்கள்.


நெடுவாசல்


வறட்சி தலைவிரித்து ஆடும் காலத்திலும்  முப்போகம் விளையும் ஒரு வளமான கிராமம் நெடுவாசல். தஞ்சை - புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்த  அழகிய கிராமத்திற்கு கடந்த ஆண்டு  ஓர் இரவில் பேரிடியென அந்தச் செய்தி வந்தது.நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தது என்று. இத்திட்டம் விளைநிலத்தையும் விவசாயத்தையும்,விவசாயிகளையும் குழி தோண்டி புதைத்துவிடும் என்பது தெரிய வந்ததும்  மக்கள் கொதித்தெழுந்தனர். கடந்த வருடம் பிப் 16- ம் தேதி முதல் போராட்டத்தைத் தன்னெழுச்சியாகத் தொடங்கினர்.இத்திட்டத்திற்கு எதிராக அவர்கள் எழுப்பிய முழக்கம் சுற்றுவட்டார கிராமங்களில் பரவ, சுமார்  70 கிராம மக்கள் அவர்களுக்கு ஆதரவாகப் போராட்டக்களத்தில் குதித்தனர். ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டு,விடாமுயற்சியுடன் தினமும் போராட, மத்திய- மாநில அரசுகள் அதிர்ந்தன.

அ.தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களைத் தவிர, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின்,தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்  ஆகியோர் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

வைகோ,சீமான் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் நெடுவாசலுக்கு நேரில் வந்து மக்களின் போராட்டத்திற்கு தோள் கொடுத்தனர்.  'நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த மாட்டோம்' என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கணேஷ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதியை நம்பி, அந்த மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதோ ஓராண்டு ஓடிவிட்டது. ஆனால், அரசு சார்பில் கொடுக்கப்பட்ட எந்த  உத்தரவாதத்தையும் மத்திய மாநில அரசுகள் இதுவரை நிறைவேற்றவில்லை. இதனால் அடுத்தக்கட்டப் போராட்டத்தை நடத்த ஆயத்தமாகி வருகிறார்கள் நெடுவாசல் போராட்டக்குழுவினர். முதல்கட்டமாக, மௌனம் காக்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, வருகின்ற 18 - ம் தேதி சுற்று வட்டார கிராம மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய ஆர்பாட்டத்தை  நெடுவாசல் போராட்டக் குழுவினர் நடத்த இருக்கிறார்கள்.

நெடுவாசல் போராளிபோராட்டக்குழுவைச் சேர்ந்த தங்க கண்ணன் நம்மிடம் பேசும்போது, "எங்கள் மண்ணையும் மக்களையும் பாதிக்கும் இந்தத் திட்டத்தினைக் குறித்து அரசுகள் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகின்றன. ஒரு முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டேபோகும் நெடுவாசல் மக்களின் பிரச்னைக்கு  சீக்கிரமாக நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தித்தான் இந்த ஆர்ப்பாட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்"என்றார்.