'நல்லோர் பலர் உளரேல்...!' - வறுமையில் வாடிய உழைப்பாளிக்கு குவிந்த உதவிகள்! | Story of a labour who is out of his poverty

வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (16/02/2018)

கடைசி தொடர்பு:18:35 (09/07/2018)

'நல்லோர் பலர் உளரேல்...!' - வறுமையில் வாடிய உழைப்பாளிக்கு குவிந்த உதவிகள்!

விகடன் இணையதளச் செய்தி எதிரொலியால், ஏழை தையல் தொழிலாளி பரசுராமனுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் உதவிகள் குவிகின்றன. இன்னொரு பக்கம், மாவட்ட ஆட்சித்தலைவரால் பல உதவிகள் கிடைத்திருக்கின்றன. இதனால், பரசுராமன் வாழ்க்கையில் தற்போது ஒளி வீசுகிறது.

பரசுராமன்

கரூர் மாவட்டம், காந்தி கிராமத்திலிருந்து வடக்கு காந்தி கிராமம் போகும் வழியில் பழைய சாக்குப் படுதாக்கள், ஃப்ளெக்ஸ்களைக் கொண்டு கூடாரம் அமைத்து கடந்த பத்து வருடங்களாகத் தையல் தொழிலைச் செய்துவருகிறார் பரசுராமன். 68 வயதாகும் இவருக்கு, தொழிற்கூடமும் இதுதான்; வீடும் இதுதான். இந்த ஏழ்மை நிலையிலும் ஏழை பள்ளி மாணவர்களுக்கும் வறியவர்களுக்கும் இலவசமாக துணி தைத்துத் தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவரைப் பற்றிய நெகிழ்ச்சியான சம்பவங்களையும், அவரின் உதவி மனப்பான்மையையும் பற்றி நமது விகடன் இணையதளத்தில், ```ஊருக்கெல்லாம் தைச்சுத் தர்றேன்... என் வாழ்க்கை கிழிஞ்சு கிடக்கு!" தையல் தொழிலாளி பரசுராமன்' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தச் செய்தி, பலரின் மனதையும் ஈர்க்க, பரசுராமனுக்கு பண உதவி உள்பட பல உதவிகள் கிடைத்துவருகின்றன. இன்னும் சிலர், அவரைப் பார்த்துப் பாராட்டிவருகிறார்கள்.

பரசுராமன்

அந்தக் கட்டுரையில், ``ஆஸ்துமா தொல்லை வாட்டுது. முன்னமாதிரி இப்ப தையல் மெஷினை மிதிக்க முடியலை. இந்த இடத்தைவிட்டு காலிபண்ணச்சொல்லி, நகராட்சி நிர்வாகம் வேற மிரட்டுது. ஓ.ஏ.பி பணம் வாங்க பல தடவை அலைஞ்சிருப்பேன். ஆனா, என்னை மனுஷனாக்கூட மதிக்காம கலெக்டர் ஆபீஸ் கடைக்கோடி ஊழியர்கூட விரட்டி அடிப்பார்"' என்று அவர் படும் அல்லாட்டத்தை எழுதியிருந்தோம். இந்தச் செய்தி, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜையும் கலங்கவைத்தது. அவர் உடனே, கரூர் ஆர்.ஐ சிவராமனைவிட்டு பரசுராமனை அழைத்து வர ஏற்பாடு செய்தார். அந்தச் சமயம், பரசுராமனுக்கு திடீரெனக் காய்ச்சலும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அதை அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர், அரசு மருத்துவமனை டீனுக்கு போன் அடித்து, பரசுராமனுக்கு சிறப்பான முறையில் சிகிச்சையளிக்கும்படி உத்தரவிட்டார். அத்துடன், பழங்களோடு போய் பரசுராமனை நலம் விசாரித்துவிட்டு வந்தார். ``நுரையீரல் பிரச்னை, காய்ச்சலும் இருக்கிறது. நான்கு நாள்கள் சிகிச்சையில் அவரை பூரண நலமாக்கிவிடலாம்'' என்று மருத்துவர்கள் கூறினர். அதன்படி, நான்கு நாள்கள் அவருக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் கிடைக்க, நடப்பவை அனைத்தும் கனவா... நனவா எனப் பரசுராமன் குழம்பிப்போனார்.

மருத்துவமனையில் தனியாக வந்து சேர்ந்து, உதவி செய்யக்கூட ஆள் இல்லாமல் விரக்தியில் படுத்திருந்த தனக்கு, மாவட்ட ஆட்சியரே முன்வந்து உதவிகள் செய்வதை நம்ப முடியாமல் கண்களில் நீரோடு பார்த்துக்கொண்டிருந்தார்.

பரசுராமன்

நான்கு நாள்கள் தொடர்சிகிச்சையில் அவர் நலமாக, அவருக்கு கலெக்டர் அலுவலகத்திலிருந்து அழைப்பு போனது. ``தாடியும் தம்பட்டையுமாக இருக்கிறேன். ஷேவ் செய்துவிட்டு நாளை வருகிறேன்'' என்ற அவர், மறுநாள் போனார். நமக்கும் அழைப்பு வர, நாமும் சென்றோம்.

கலெக்டர் அறைக்குள் நுழைந்த அவரை, ``வாங்க பரசுராமன். உடம்பு இப்போ தேவலாமா?" என்றபடி கலெக்டரே எழுந்து வந்து வரவேற்க, திக்குமுக்காடிப்போனார் பரசுராமன். அவரை நாற்காலியில் அமரவைத்த ஆட்சியர், ``பழைய மெஷினில் தைப்பதாக செய்தியில் படிச்சேன். அதனால், 5,000 ரூபய் மதிப்பீட்டில் இப்போது உங்களுக்கு புது தையல் மெஷின் சமூகநலத் துறை சார்பில் வழங்க ரெடி பண்ணிட்டோம். அதேபோல், ஓ.ஏ.பி பணத்துக்கு ரெடி பண்ணி, ஆர்டரும் போட்டாச்சு. வரும் மாசத்திலிருந்து உங்க அக்கவுன்ட்டுல ஏற ஆரம்பிச்சுடும். அப்புறம், உங்களுக்கு அதே பகுதியில் ஒரு இடம் பார்த்து, அந்த இடத்துல நீங்க நிரந்தரமா தொழில் செய்ய ஏற்பாடு பண்ணச் சொல்லியிருக்கிறேன். 40,000 ரூபாய் மதிப்பில் நீங்க அமர்ந்து பணிபுரிய பெட்டி செய்யச் சொல்லியிருக்கிறோம். வந்ததும் உங்களுக்குக் கொடுப்போம். தவிர, உங்களுக்குத் தேவைப்பட்டா, தொழில் லோன் தர ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகம் தயாரா இருக்கு. குடியிருக்கவும் ஏற்பாடு செய்றோம்" என்றார் ஆட்சியர் கோவிந்தராஜ்.

கண் முன் நடக்கும் இவை அனைத்தையும் நம்ப முடியாமல் அமர்ந்திருந்த பரசுராமன், ``சார் இதுவே போதும். வாழ்க்கையே வெறுத்து, உடம்புக்கு முடியலைன்னா என்ன ஏதுன்னு பார்க்கக்கூட நாதியில்லாம கிடந்தேன். ஆனா, மருத்துவமனையில் ராஜமரியாதை. நூறு தடவைக்குமேல அலைஞ்சும் கிடைக்காத ஓ.ஏ.பி பணத்தை, தேடிவந்து தந்து, `நான் இன்னும் வாழணும்'கிற மன உறுதியைக் கொடுத்திட்டீங்க. நான் இந்தத் தொழிலை இன்னும் சிறப்பா செஞ்சு, ஏழைக் குழந்தைகளைப் படிக்கவைக்கலாம்னு இருக்கேன்" என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் பரசுராமன். அந்த இடத்திலேயே அவருக்கு ஓ.ஏ.பி பணத்துக்கான ஆர்டர், தையல் மெஷின் உள்ளிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பரசுராமன்

 நம்மிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ்,

``அந்தச் செய்தியைப் படிச்சதும், பரசுராமன்மேல பெரிய மரியாதை பிறந்தது. காசு, பணம், பதவி இருந்தும் ஏழைகளுக்கு உதவணும்கிற எண்ணம் யாருக்கும் இருப்பதில்லை. அது சமூகத்தின் சாபக்கேடு. ஆனால், அடுத்த வேளை சாப்பாட்டுக்கே சிரமம், ஆஸ்துமா வியாதி, கவனிக்க ஆள் இல்லாத சூழலில்கூட, கிடைத்த சொற்ப வருமானத்துலயும் மாணவர்களுக்கு இலவசமா துணி தைத்துக் கொடுத்த பரசுராமன், உண்மையில் கொண்டாடப்படவேண்டிய மனிதர். அவருக்கு மாவட்ட நிர்வாகம் செய்தது உதவியல்ல, ஊக்கம். இதுபோன்ற விளிம்புநிலை மனிதர்களை வெளி உலகத்துக்குத் தொடர்ந்து அடையாளப்படுத்துங்கள்" என்றார்.

பரசுராமன்

நம் கைகளைப் பிடித்துக்கொண்ட பரசுராமன், ``பேச வார்த்தையே இல்லை தம்பி. முன்னாடியெல்லாம், என்னை `பொறம்போக்கு இடத்துல கடை போட்டிருக்கான்'னு ஏளனமா பேசுவாங்க. ஆனால், இப்போ யார் யாரோ பெயர், முகம் தெரியாத மனிதர்கள் எல்லாரும் வந்து என்னைப் பாராட்டி, பண உதவி செய்றாங்க. இதுக்குக் காரணம், எங்கப்பா செய்த புண்ணியம். விகடன் பத்திரிகையையும், மாவட்ட ஆட்சித்தலைவரையும் என் ஆயுசுக்கும் மறக்க மாட்டேன். நீங்க நல்லா இருக்கணும்" என்றபோது, உணர்ச்சிப்பெருக்கில் நமக்கும் நெஞ்சை அடைத்தது.


டிரெண்டிங் @ விகடன்