நிலுவைத் தொகை வழங்காமல் ஏமாற்றும் சர்க்கரை ஆலை! - நியாயம் கேட்ட விவசாயியைக் கடுமையாகத் தாக்கிய மேலாளர்

 சர்க்கரை ஆலை

நிலுவைத் தொகை கேட்டு சர்க்கரை ஆலைக்குள் நுழைந்த விவசாயி ஒருவரை, சர்க்கரை ஆலையின் மேலாளர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஆலத்துக் கோம்பையில் தனியார் சர்க்கரை ஆலை ஒன்று உள்ளது. இந்தச் சர்க்கரை ஆலைக்கு ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்தச் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக டன் ஒன்றுக்கு நிலுவைத் தொகையாக ரூ.1,325 வீதம் மொத்தமாக ரூ.36 கோடி நிலுவைத் தொகையினை வழங்காமல் இழுத்தடிருக்கிறது சர்க்கரை ஆலை நிர்வாகம்.

இதற்கிடையே, ஆலை அதிகாரிகள் கரும்பு விவசாயிகளிடம் டன் ஒன்றுக்கு நிலுவைத் தொகையாக உள்ள ரூ.1,325-க்கு பதிலாக, ரூ.130 மட்டுமே பாக்கி உள்ளதாக ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்து வாங்கியிருக்கின்றனர். தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்பதை அறியாமல் விவசாயிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.

இதனையடுத்து ரூ.1,325 வழங்குவதற்குப் பதிலாக ரூ.130 மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்த சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 2-ம் தேதி முதல் விவசாயிகள் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 சர்க்கரை ஆலை

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தின்போது அதில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் சர்க்கரை ஆலைக்குள் நுழைந்திருக்கின்றனர். அப்போது ஆலை மேலாளர், சுப்பிரமணியம் என்ற விவசாயியைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். இதனால் போராட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது. மேற்கொண்டு வேறெந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க அங்கிருந்த விவசாயிகள் 44 பேரை போலீஸார் கைது செய்தனர். `தவறு செய்த ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக இருந்துகொண்டு, பாதிக்கப்பட்ட எங்களைக் கைது செய்வது என்ன நியாயம்?' என விவசாயிகள் கூச்சலிட்டனர்.

மேலும், “ஆலை மேலாளரை சந்தித்துப் பேசுவதற்காகச் சென்றால் தாக்குதல் நடத்துவார்களா. தாக்குதல் நடத்திய  அந்த மேலாளரை உடனே கைது செய்ய வேண்டும். போலீஸாரும் ஆலை நிர்வாகத்திற்குச் சாதகமாகத்தான் செயல்படுகிறார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்னையில் தலையிட்டு, எங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிலுவைத்தொகை உடனடியாகக் கிடைக்க வழி செய்திட வேண்டும்” எனக் கைது செய்யப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக அமைதியாக நடைபெற்று வந்த காத்திருப்பு போராட்டத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!