வீட்டில் இன்று மின்சாரம் கட் ஆனால், மீண்டும் மின் சப்ளை கிடைப்பதில் சிக்கல்!

மின்வாரிய ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி இருப்பதால், இன்று வீடுகளில் மின் இணைப்பு கட் ஆனால், மீண்டும் மின்சாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் நிலைமை உருவாகி இருக்கிறது.

மின்சாரம் கிடைப்பதில் சிக்கல்

மின்வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 3 வருடங்களாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. அதனால், 2.57 மடங்கு ஊதிய உயர்வு, 2015 டிசம்பர் முதல் நிலுவைத் தொகையைக் கணக்கிட்டு வழங்க வேண்டும், மின்வாரியத்தில் காலியாகக் கிடக்கும் 60,000-த்துக்கும் அதிகமான பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுடன் தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் மின்வாரியத்தின் 10 தொழிற்சங்கங்கள் சார்பாக இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 40,000-த்துக்கும் அதிகமான ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.  இந்தப் போராட்டம் காரணமாக எந்தப் பகுதியிலும் மின் சப்ளை நிறுத்தப்பட மாட்டாது. அதே சமயம், எந்தப் பகுதியிலாவது அல்லது எந்த வீட்டிலாவது மின் சப்ளையில் கோளாறு ஏற்பட்டு தானாகவே நின்று போகுமானால், அதனைச் சரிசெய்ய ஊழியர்கள் வர மாட்டார்கள். அதனால் மீண்டும் மின் இணைப்புக் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும் ஆபத்து உருவாகி இருக்கிறது. 

நெல்லை மாவட்டத்தில் 150 பிரிவு அலுவலகங்களும் 120 துணை மின்நிலையங்களும், 40 உதவி இயக்குநர் அலுவலகங்களும் 8 கோட்ட அலுவலகங்களிலும் ஊழியர்கள் பணிக்கு வராததால் பணிகள் முழுமையாக முடங்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் சுமார் 2,000 ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். இந்த ஸ்டிரைக் காரணமாக மின் கட்டண வசூல் பணிகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. 

தங்களுடைய கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளாவிட்டால்,தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. அதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்பதால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு போராடும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வுக்கு வழிவகுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!