திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது | Dindigul Kottai mariyamman kovil Festival Started

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (16/02/2018)

கடைசி தொடர்பு:12:15 (16/02/2018)

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா தொடங்கியது.

Kottai Mariyaman

திண்டுக்கல் மலைக்கோட்டையின் கீழ் அமைந்துள்ளது கோட்டை மாரியம்மன் கோயில். பிரசித்திப் பெற்ற இந்தக் கோயிலில் மாசி Kottai mariyamanமாதத்தில் வெகுவிமரிசையாக திருவிழா நடைபெறும். அனைத்து மதத்தினரும் இதில் பங்கேற்பார்கள். முன்னூறு ஆண்டுக்காலம் பழமை வாய்ந்த இக்கோயிலின் இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா நேற்று இரவு பூ அலங்காரத்துடன் தொடங்கியது. கோயில் வளாகம் முழுவதும் பூக்களால் ஆன கோலங்கள் இடப்பட்டிருந்தன. அதைத்தொடர்ந்து இன்று காலை பூச்சொரிதல் நடைபெற்று வருகிறது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சிகொடுத்தார். நான்கு ரத வீதிகளிலும் திரண்டிருந்த பக்தர்கள், அம்மன்மீது பூக்களைத்தூவி வணங்கினார்கள். ஆங்காங்கே நீர்மோர் பந்தல், அன்னதானம் என நான்கு ரதவீதிகளும் திருவிழா கோலம் பூண்டிருக்கின்றன.

தொடர்ந்து, வரும் 18-ம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியும், 20-ம் தேதி கொடியேற்றமும் நடைபெறும். மார்ச் 2-ம் தேதி பூக்குழி இறங்குதல் நடைபெறும். வேறு எந்த அம்மன் கோயில்களிலும் இல்லாத வகையில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு தசாவதாரம் நடைபெறும். மார்ச் மாதம் 3-ம் தேதி தசாவதாரமும், அடுத்த நாள் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும். தொடர்ந்து கொடியிறக்கப்படும். 5-ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். 6-ம் தேதி தெப்ப உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறும். இருபது நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்துக்கொள்வார்கள். மாசித்திருவிழா தொடங்கியுள்ளதால் நகர் முழுவதும் சாலைகளில் தண்ணீர் ஊற்றியும், ஆங்காங்கே பந்தல், வாழைமரம், மாவிலை தோரணம் கட்டியும் நகர் அழகாகக் காட்சியளிக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க