225 கல்லூரிகள்... 2,500 மாணவர்கள்... ஏ.பி.வி.பி மாநாட்டின் நோக்கம் என்ன?

ஏபிவிபி

கில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) 23-வது மாநில மாநாடு வருகின்ற 17-ம் தேதி சென்னை வியாசர்பாடியில் உள்ள விவேகானந்தா பள்ளியில் தொடங்கவிருக்கிறது. 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களில் நடக்கவிருக்கும் இந்த மாநாட்டில், தமிழகம் முழுவதும் உள்ள 225 கல்லூரிகளிலிருந்து சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சந்திரகுமார் போஸ் வருகை தரவிருக்கிறார். ''இந்த மாநாட்டில், தமிழகத்தில் நிலவும் கல்வி ரீதியான பிரச்னைகளைக் களையவும்  சமுதாய விழிப்புஉணர்வு சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றுவதையும் முக்கியக் குறிக்கோளாகக்கொண்டிருக்கிறோம்'' என்று மாநாட்டு கமிட்டி தெரிவித்துள்ளது.

இதுபற்றி ஏ.பி.வி.பி தமிழக மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் கங்காதரன் நம்மிடம் பேசியதாவது, "ஊழல் இல்லாத கல்வி, கல்லூரி வளாகத் தேர்வு, சமுதாய விழிப்புஉணர்வு ஆகிவற்றைக் கொண்டுவருவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம். கல்வித்துறையில் ஊழல் பெருகிவிட்டது. ஒரு பணியாளரை நியமிப்பதற்கு லட்சக்கணக்கான பணம் லஞ்சமாகப் பெறப்படுகிறது. இந்த முறையை அறவே நீக்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கான வளாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். திராவிட அரசியலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கல்லூரித் தேர்தல் நடத்தப்படவில்லை. கல்லூரி வளாகத் தேர்வுதான் நல்ல தலைவர்களை நாட்டுக்கு உருவாக்கித் தரும். 

கங்காதரன்

கங்காதரன்

இதுவரை 22 முறை தமிழ் மாநில மாநாடு நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த முறை மாநாடு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. முன்னர் 10, 12 மாவட்டங்களைச் சேர்ந்த ஏ.பி.வி.பி  மாணவர்கள் வருவார்கள். இந்தமுறை 34 மாவட்டங்களிலிருந்து 2,500-க்கும் மேற்பட்ட ஏ.பி.வி.பி மாணவர்கள் வருகை தரவிருக்கிறார்கள். 'மாற்றம்... முன்னேற்றத்துக்கான மாணவர்கள்!' என்பதே இந்த மாநாட்டின் தாரக மந்திரம். மாணவர்களின் பிரச்னைகளில் எங்கள் அமைப்பானது தனியாக நின்று போராடாது; அனைத்து அமைப்புகளுடன் சேர்ந்து பிரச்னைக்கு எதிராக, மாணவர்களின் நலன் காக்கப் போராடுவோம். நமது நாட்டில் ஏட்டுக்கல்வி முறைதான் இருந்து வருகிறது. மாணவர்களுக்கான தரமானக் கல்வி என்பது இங்கு கிடையாது. அதனால்தான் நீட் போன்ற தேர்வை நம்மால் எதிர்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், நீட் தேர்வுக்கான பாடமுறை தமிழகத்தில் இல்லை. கண்டிப்பாக நீட் தேர்வு அவசியமான ஒன்று. நீட் தேர்வுக்கான கல்வி முறையைக் கொண்டுவர வேண்டும். நீட் தேர்வு என்பது இன்று, நேற்று பேசி கொண்டுவரப்பட்டதல்ல... கடந்த 6,7 ஆண்டுகளாகவே இந்த முறை பேசப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசு அதற்கான கல்வி முறையைக் கொண்டுவருவதில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. இந்தியாவில் தேசியம் சார்ந்த கல்வி முறை உருவாக்கப்படவேண்டும். அது கலாசாரத்தைப் பிரதிபலிப்பதாகவும், நமது நலன் காப்பதாகவும் இருக்கவேண்டும். அதற்காக ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பு தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டே இருக்கும்." என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!