வெளியிடப்பட்ட நேரம்: 12:01 (16/02/2018)

கடைசி தொடர்பு:12:30 (16/02/2018)

' மோடி உரையை மாணவர்கள் கேட்க வேண்டும்!'  - கட்டாயப்படுத்தும் பள்ளிக் கல்வித்துறை 

செங்கோட்டையன்

ள்ளிக் கல்வித்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ள சுற்றறிக்கை ஒன்று பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ' தொலைக்காட்சியில் பிரதமர் மோடி பேசும் உரையை மாணவர்கள் கட்டாயம் கேட்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மாணவர்கள் மத்தியில் மோடியை விளம்பரப்படுத்தும் இந்த நிகழ்ச்சியை அனுமதிக்கக் கூடாது' எனக் கொதிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கடந்த வாரத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில், ' பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குச் சென்று சேரக் கூடிய வகையில் பாடத்திட்டத்தில் மோடியைப் பற்றி விவரங்கள் இடம் பெற வேண்டும்' என தமிழிசை அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியானது. ' அதாவது, 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்த மாணவர்கள் வாக்கு செலுத்தும் வயதுக்கு வந்துவிடுவார்கள். அதையொட்டியே மாணவர்கள் மத்தியில் மோடியை பிரபலப்படுத்தும் வேலைகள் நடந்து வருகிறது' என நம்மிடம் விவரித்தனர் பா.ஜ.க நிர்வாகிகள். மத்திய அரசின் இந்த யோசனையை எடப்பாடி பழனிசாமியும் ஏற்றுக் கொண்டார் எனவும் தெரிவித்தனர். இதன் நீட்சியாகவே, ' பிரதமரின் உரையை மாணவர்கள் கட்டாயம் கேட்க வேண்டும்' என்ற சுற்றறிக்கையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ளது. 

மோடி உரை-பள்ளிக் கல்வி சுற்றறிக்கை

' மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரின் செயல்முறைகள் என்ற தலைப்பில் கடந்த 13.2.18 அன்று அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மாநில திட்ட இயக்குநர் ராமேஸ்வர முருகன். அந்த அறிக்கையில், ' மாண்புமிகு பாரத பிரதமர் டிவி/ரேடியோ/வலைதளம்/ யூ ட்யூப் மூலம் மாணவர்களுக்கு 16.2.2018 அன்று காலை 11 மணி முதல் 12 மணி வரையில் உரையாற்ற உள்ளார். பார்வையில் காணும் செயல்முறைகளின்படி, இந்நிகழ்வை மாணவர்கள் கண்டு கேட்ட செய்யப்பட்டுள்ள போதுமான முன்னேற்பாடு பற்றிய உறுதி அறிக்கையினை 14.2.2018 அன்று மாலை 4 மணிக்குள்ளும் மற்றும் கண்டு கேட்டபின், பின்தொடர் அறிக்கையினை 16.2.2018 அன்று மதியம் 1 மணிக்குள்ளும் அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, கீழ்காணும் படிவம் 2-ஐ 16.2.2018 அன்று நண்பகல் 12 மணிக்குள் பூர்த்தி செய்தும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈஸ்வரன், ம.தி.மு.க.பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு குறித்து, நம்மிடம் பேசிய ம.தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், " பள்ளிக் கல்வித்துறையின் இந்தச் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது. ' பிரதமரின் உரையை மாணவர்கள் கட்டாயமாகக் கேட்க வேண்டும்' என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ' ஒவ்வொரு பள்ளிக் கூடத்திலும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, மாணவர்கள் பார்ப்பதைப் பதிவு செய்து அனுப்ப வேண்டும்' எனக் கூறியுள்ளனர். பிரதமர் மோடியை மாணவர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கும் வேலையை பள்ளிக் கல்வித்துறை செய்கிறது. இது முற்றிலும் விளம்பர நிகழ்ச்சி. மாணவர்கள் மத்தியில் மோடியைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. பா.ஜ.க அரசின் கொள்கைளைக் கொண்டு சேர்க்கும் மறைமுக முயற்சியாகவே இதைப் பார்க்கிறோம். இதனை தமிழக அரசு அனுமதித்திருக்கக் கூடாது. ஒருவர் பேசுவதை விருப்பத்தோடு பார்ப்பது என்பது வேறு. இதனைப் பதிவு செய்து பள்ளிக் கல்வித்துறை செயலர் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளனர். முந்தைய காலகட்டங்களில் இப்படியெல்லாம் நடந்தது கிடையாது. பள்ளிக் கல்வித்துறையின் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்" என்றார் கொதிப்போடு. 

இதுகுறித்து, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் இயக்குநர் ராமேஸ்வர முருகனிடம் பேசினோம். " இவ்வாறு செய்யுமாறு இந்தியா முழுக்கவே உத்தரவிட்டுள்ளார். மீண்டும் உங்களிடம் பேசுகிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார். 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் விளக்கம் கேட்கத் தொடர்பு கொண்டோம். " அமைச்சர் நிகழ்ச்சியில் இருக்கிறார்" எனப் பேசிய அவருடைய உதவியாளர் கதிர், " பிரதமர் உரையைக் கேட்பதில் என்ன தவறு என்று தெரியவில்லை? அனைத்து மாணவர்களுக்கும் பிரதமர் என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள இப்படியொரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது திணிப்பு முயற்சி அல்ல. அவர் நாட்டின் பிரதமர். மாணவர்களுக்கு அவர் ஏதோ சொல்ல வருகிறார். இதை எடுத்துக் கொள்கிறவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறாகத்தான் இருக்கும். அரசியல் பற்றி நாம் பேச வேண்டியதில்லை. இதை ஏன் நல்ல விஷயமாகப் பார்க்கக் கூடாது? அவர் சொல்வதை எல்லாம் நாம் எதிர்மறையாகத்தானே யோசிக்கிறோம்? அவர் சொன்னதைக் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாணவர்கள் தேர்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என அவர் பேசுகிறார். நல்ல அறிவுரையை நல்ல கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்" என்றார் உறுதியாக. 


டிரெண்டிங் @ விகடன்