வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (16/02/2018)

கடைசி தொடர்பு:12:48 (16/02/2018)

``நீதி கிடைக்கவில்லை” - உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் கொந்தளித்த டெல்டா விவசாயிகள் #CauveryVerdict

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தமிழக மக்கள் மற்றும் தமிழக விவசாயிகளுக்கான நீதி கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை” என்று காவிரி டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நம்மிடம் பேசிய காவிரி டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வி.இளங்கீரன், ”இந்த தீர்ப்பில் தமிழக மக்கள் மற்றும் தமிழக விவசாயிகளுக்கான நீதி கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால் 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று இடைக்காலத் தீர்ப்பு வெளியிடப்பட்டு அதன்பின் 192 டி.எம்.சியாக மாறி தற்போது 177.25 டி.எம்.சி என்று கூறியிருக்கிறார்கள். காவிரி நதி நீரை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்று ஒருவிவசாயிகள் விஷயம் மட்டும்தான் தமிழக விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. அதேசமயம் ஒப்பீட்டளவில் கர்நாடகத்தை விட தமிழகத்தின் பாசன பரப்பளவு அதிகம். இந்நிலையில் அவர்களுக்கு அதிகமாகவும் தமிழகத்துக்கு குறைவாகவும் கூறியிருப்பது ஒருதலைப் பட்சமான தீர்ப்பாகவே நாங்கள் கருதுகிறோம்.

நம் விவசாயிகளுக்காக 264 டி.எம்.சி தண்ணீரை தமிழக அரசு கேட்டிருந்தது. 192 டி.எம்.சியின் அளவை 200 டி.எம்.சி அளவுக்கு உயர்த்தி தீர்ப்பு வரும் என்றுதான் நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அதையும் குறைத்து 177.25 என்று கூறியிருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருந்தாலும் இந்த தண்ணீரையே கர்நாடம் எப்படி கொடுக்கப் போகிறது என்ற தெளிவான தகவல் இன்னும் வரவில்லை. இதை மாநில அரசே நடைமுறைப்படுத்துமா ? மத்திய அரசா அல்லது உச்சநீதிமன்றமா என்பதையும் பார்க்க வேண்டும். ஏனென்றால் இதற்கு முன்பு உச்சநீதிமன்றம் கூறிய எதையும் கர்நாடக அரசு மதிக்காததோடு அதை நடைமுறைப்படுத்தவும் இல்லை. அப்படி இருக்கும்போது இந்த தண்ணீரை அவர்கள் அளிப்பார்களா என்பதும் சந்தேகம்தான். தீர்ப்பின் முழு விபரமும் வந்தால்தான் இன்னும் விரிவாகப் பேச முடியும்” என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க