வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (16/02/2018)

கடைசி தொடர்பு:15:44 (16/02/2018)

வால்பாறையில் குழந்தைகளைக் குறி வைத்துத் தாக்கும் சிறுத்தைப்புலி... காரணம் என்ன?

சிறுத்தைப்புலி

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலைத்தோட்டங்கள் உள்ளன. இந்தத் தோட்டங்களில் லட்சக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர் வேலை பார்க்கின்றனர்.  தேயிலைத்தோட்டங்களின் நடுவில் சிறுத்தைப்புலிகட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்தத் தேயிலைத்தோட்டங்கள் பெரும்பாலும் அடர் வனங்களை ஒட்டியே உள்ளன.  யானை, சிறுத்தைப்புலி, கரடி, குரங்கு, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளின் வாழ்விடமாகத் திகழ்கிறது அந்த அடர்வனங்கள். சமீபகாலமாக அடர் வனங்களை விட்டு வெளியேறும் யானைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை இடித்து  உள்ளே புகுந்து அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்  மூட்டைகளை உடைத்து அதிலுள்ள அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவுப்பொருள்களை ஆசைதீர சாப்பிட்டு ஓட்டம்பிடிக்கும் செயல் அடிக்கடி நடக்கும் ஒன்றாக இருக்கிறது.

யானைக்கூட்டங்களால் உணவுப்பொருள்கள்தாம் சேதமாகின்றன, உயிர்சேதம் எதுவும் ஏற்படுவதில்லை. ஆனால், சமீபகாலமாக வால்பாறை மக்கள் அஞ்சி நடுங்குவது யானைகளுக்காக அல்ல. ஆட்கொல்லி சிறுத்தைகளுக்காக, அதுவும் குறிப்பாகக் குழந்தைகளை குறிவைத்து தாக்கிவிட்டு காட்டுக்குள் இழுத்துச் சென்று ரத்தம் குடிக்கும் சிறுத்தைப்புலிகளைக் கண்டு வால்பாறையே உறக்கமில்லாமல் தவிக்கிறது.

கடந்த ஆண்டில் மட்டும் நான்கு சிறுவர்கள் சிறுத்தையால் கொல்லப்பட்டுள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் படுகாயமடைந்து உயிர் பிழைத்துள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந்தேதி அன்று தேயிலைத்தோட்ட தொழிலாளி ஜெயக்குமார் என்பவரின் நான்கு வயது ஆண் குழந்தை ஜான்டோரினோ. தேயிலைத் தோட்டத்தையொட்டியுள்ள தனது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீர் என்று தேயிலைத்தோட்டத்திலிருந்து பாய்ந்து வந்தது சிறுத்தை ஒன்று. ஜான்டோரினோ மீது பாய்ந்து தாக்கி கழுத்தைப் பிடித்து தரதரவென்று அருகிலுள்ள காட்டுக்குள் இழுத்துச்சென்று, குரல்வளையைக் கடித்து துண்டாக்கி ரத்தம் குடித்துள்ளது.

அதேபோல்,கடந்த பிப்ரவரி 8-ந்தேதி அன்று வால்பாறை நடுமலை எஸ்டேட் பகுதியில் நடந்துவந்துகொண்டிருந்த சிறுவன் சைதுல் இஸ்லாம் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலியால் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளான்.

சிறுத்தைகள், குழந்தைகளைக் கொல்வதும், வனத்துறையினர் அதைக் கூண்டுவைத்து பிடித்து மறுபடியும் காட்டுக்குள் கொண்டுபோய் விடுவதும் தொடர்கதையாகிவிட்டது.

காலம் காலமாகக் காட்டுக்குள் வேட்டையாடி உணவு தேடிய சிறுத்தை ஊருக்குள் புகுந்து குழந்தைகளைத் தாக்குவதற்கான காரணம் என்ன என்பதை நாம் கேட்ட நபர் சூழலியலாளர் கோவை சதாசிவம் ‘‘ உணவு தேடித்தான் அவை ஊருக்குள் வருகின்றன. குழந்தைகளின் உருவம் பதுங்கியிருக்கும் சிறுத்தையின் பார்வையில் சிறுவிலங்குபோல தெரிவதால், ஏதோ ஒரு விலங்கு என்று குழந்தைகள்மீது பாய்கிறது. மேலும், நாய்கள் என்றால் சிறுத்தைகளுக்கு மிகவும் இஷ்டம். குடியிருப்புப் பகுதிகளில் இப்போது பலரும் நாய் வளர்க்கிறார்கள் அதை அடித்துச் சாப்பிடவும் , பிராய்லர் கோழிகளின் இறைச்சிக் கழிவுகளை வீதிகளில் கொட்டுவதால் அதைச் சாப்பிட்டு பழகிய சிறுத்தைகளை அந்த இறைச்சி வாடை வரவைக்கிறது.

சதாசிவம்காடுகள் என்பது விலங்குகளின் வீடு. அதை அழித்து தேயிலைத்தோட்டங்கள் அமைத்தார்கள். மீதமுள்ள காடுகளில் வேட்டையாடி சிறுத்தைகளின் உணவுச் சங்கிலியில் உள்ள மான், மாடு, பன்றி போன்ற விலங்குகளின் எண்ணிக்கையைக் குறைத்தார். தொடர்ந்து வனக்கிராமங்களை சுற்றுலாத்தலங்களாக மாற்றி வன விலங்குகளின் வாழ்வியல் சூழலைச் சிதைத்தார்கள். அதன் விளைவுதான் இன்று சிறுத்தைகளும் யானைகளும் காட்டைவிட்டு வெளியேறுகின்றன.

இதைத்தடுக்க ஒரே வழி, வனப்பகுதியின் பரப்பளவை அதிகரிக்க வேண்டும். காட்டுயிர்களின்  உணவுச்சங்கிலி அறுந்துவிடாமல் காப்பாற்றப்படவேண்டும். வனம் இருந்தால்தான் இனம் இருக்கும் என்பது குறித்த விழிப்புஉணர்வை மலைப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும்” என்றார் சதாசிவம்.
 


டிரெண்டிங் @ விகடன்