`இங்கு டாக்டர்கள் இல்லை' - ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகனைப் பறிகொடுத்த தந்தை கதறல் | Doctors Shortage; Child Loss his life

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (16/02/2018)

கடைசி தொடர்பு:15:53 (02/07/2018)

`இங்கு டாக்டர்கள் இல்லை' - ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகனைப் பறிகொடுத்த தந்தை கதறல்

 பலியான குழந்தையின் பெற்றோர்

ஒரு கிராமத்தில் நிலவும் கடுமையான தண்ணீர் பிரச்னை ஒன்றரை வயது ஆண் குழந்தையைப் பலிவாங்கிய கொடுமை அரங்கேறி இருக்கிறது.

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்தில் இருக்கிறது வடசேரி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த தன்ராஜ்-நதியா தம்பதிக்கு திவ்யா, தர்ஷினி என்ற இரண்டு பெண் குழந்தைகளும் பூபதி என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இருந்தார்கள். இந்நிலையில், அந்த ஊரில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால், பூபதி இறந்துவிட்டதாகப் பெற்றோர் கண்ணீர் சிந்துகிறார்கள். கரூர் மாவட்டத்தின் கிழக்கு எல்லையில் திருச்சி மாவட்ட எல்லையாக 80 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது வடசேரி கிராமம். கடந்த ஒரு வருடமாகவே இந்த ஊரில் குடிக்க, விவசாயம் செய்ய என்று சுத்தமாகத் தண்ணீர் இல்லாமல், மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் அல்லாடி வந்திருக்கிறார்கள். குடிக்கத் தண்ணீர் எடுக்க பெண்கள் 3 கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீர் தூக்கி வர வேண்டுமாம்.


 குழந்தை பூபதி

இந்நிலையில், தன்ராஜ் வேலைக்குச் சென்றுவிட, நதியா இரண்டு நடைகள் தண்ணீர் குடத்தைப் பூபதியை ஒரு இடுபிலும், தண்ணீர் குடத்தை மற்றொரு இடுப்பிலும் தூக்கிக்கொண்டு வந்திருக்கிறார். மூன்றாவது நடை போகும்போது அவருக்கு உடல் அசதியாக இருக்க, மகன் பூபதியை வீட்டிலேயே விட்டுவிட்டு, தனது சிறு மகளைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு போய் தண்ணீர் சேகரித்து வந்திருக்கிறார். ஆனால், அவரின் மகள் அசந்த நேரத்தில் தவழ்ந்துபோன பூபதி, அருகில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து, மூச்சடைத்து கிடந்திருக்கிறான். வந்து பார்த்து பதறிய நதியா, அவனைத் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள காவக்காரன்பட்டி துணை சுகாதார நிலையத்தில் காண்பிக்க, அங்கு டியூட்டியில் இருந்த ஒரே ஒரு நர்ஸ் மட்டும், `இங்கு டாக்டர்கள் இல்லை' என்று கைவிரிக்க, பூபதியைத் தூக்கிக்கொண்டு, தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஓடி இருக்கிறார்கள். ஆனால், அதற்குள் பூபதி இறந்துவிட்டான்.

"எங்க ஊர்ல நிலவும் தண்ணீர் பிரச்னையாலதான் எங்க பிள்ளையை இழந்துட்டோம். தண்ணீர் பிரச்னை இல்லைன்னா, பூபதியை என் பார்வையிலேயே வைத்திருந்திருப்பேன். அதோட, காவக்காரன்பட்டி துணை சுகாதாரநிலையத்தில் இருக்க வேண்டிய ரெண்டு டாக்டர்களும் டியூட்டியில் இல்லை. இதனால், என் மகனை இழந்து நிற்கிறேன்" என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார் நதியா. பூபதி இறப்புக்கு காரணமான  டியூட்டியில் இல்லாத டாக்டர்களைக் கண்டித்து மக்கள் சாலைமறியல் செய்தனர்.