மூலிகைக் கண்காட்சியில் பெண்கள் கொண்டுவந்த தாவரங்கள்! ரசிக்கவைத்த 400 மூலிகைகள் | herbal expo has been conducted in nellai science center

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (16/02/2018)

கடைசி தொடர்பு:16:00 (16/02/2018)

மூலிகைக் கண்காட்சியில் பெண்கள் கொண்டுவந்த தாவரங்கள்! ரசிக்கவைத்த 400 மூலிகைகள்

மூலிகை கண்காட்சி

மூலிகைத் தாவரங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகைக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. 3 நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் அரிய வகை மருந்துத் தாவரங்கள் குறித்த முழுத்தகவல்களையும் அறிந்துகொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்ட அறிவியல் மையம் சார்பாகப் பிப்ரவரி 18-ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. இதைக் களக்காடு-முண்டந்துறை கள இயக்குநர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார். உலகத் தமிழ் மருத்துவக் கழகத்தின் தலைவர் டாக்டர் மைக்கேல் ஜெயராஜ், நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தின் அலுவலர் நவராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தக் கண்காட்சியில் நெல்லை மாவட்டத்திலிருந்து மட்டும் அல்லாமல் தூத்துக்குடி, குமரி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்று மூலிகைகளைக் காட்சிக்கு வைத்துள்ளனர். 

இந்தக் கண்காட்சியில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் பங்கேற்க வகை செய்யப்பட்டு இருந்ததால், ஏராளமான குடும்பத் தலைவிகளும் எளிமையாகத் தங்களுடைய வீடுகளில் வளர்க்கும் நோய் தீர்க்கும் தாவரங்களையும் கொண்டுவந்து காட்சிக்கு வைத்தனர். அத்துடன், அந்த மூலிகையின் வட்டாரப் பெயர், மூலிகைப் பெயர், அறிவியல் பெயர், மருத்துவக் குணம் போன்ற குறிப்புகளைத் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்ததால் பார்வையாளர்களுக்குப் பெரிதும் பயன் அளிப்பதாக இருந்தது. 

கண்காட்சி

கேன்சரைக் குணப்படுத்தும் நித்திய கல்யாணி, தீராத தலைவலியைத் தீர்த்து வைக்கும் நொச்சி, தோல் வியாதிகளுக்குத் தீர்வளிக்கும் குப்பைமேனி, ஆஸ்துமாவைக் குணப்படுத்தும் தூதுவளை, நீரிழிவைக் கட்டுப்படுத்தும் அவரைக்காய் மற்றும் சாதிக்காய், ஓமம், சித்தரத்தை, வல்லாரை உள்ளிட்ட 400-க்கும் அதிகமான அரிய வகை மூலிகைகள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இந்த மூலிகை கண்காட்சியை ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். கண்காட்சியின் நிறைவு நாளில் மூலிகைகளைக் காட்சிப்படுத்திய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.