வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (16/02/2018)

கடைசி தொடர்பு:16:20 (16/02/2018)

`20% நிலத்தடி நீர் உப்புநீர்தான்' - காவிரி தீர்ப்பு குறித்து ஜி.ராமகிருஷ்ணன் வேதனை

எடப்பாடி பழனிசாமியின் ஓராண்டு ஆட்சி நிர்வாகம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. சத்துணவு ஆயா வேலை முதல் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பணியிடம் வரை அனைத்து துறைகளிலும் முறைகேடுகளை நிகழ்த்தியதுதான் ஓராண்டு சாதனையாக உள்ளது" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


காவிரி- ஜி.ராமகிருஷ்ணன்

தூத்துக்குடியில் நாளை (17-ம் தேதி) தொடங்கி வரும் 20-ம் தேதி வரை நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் மற்றும் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் காவிரியில் கர்நாடகா அணை கட்டக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கக்கூடியது. ஆனால், இந்தத் தீர்ப்பில் 177.25 டி.எம்.சி தண்ணீரைத் தமிழகத்துக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்தத் தண்ணீர் டெல்டா மாவட்டங்களுக்குப் போதாது. 20% தண்ணீர் நிலத்தடி நீர் மூலம் கிடைக்கிறது என கூறியுள்ளது. நாகை போன்ற கடலோர மாவட்டத்தில் நிலத்தடி நீர் உப்புநீராகத்தான் இருக்கும். இதை வைத்து விவசாயம் செய்ய முடியாது.

தமிழகத்தில் ஓர் ஆண்டை நிறைவு செய்திருக்கும் எடப்பாடி ஆட்சியை கொண்டாட இருக்கிறார்கள். ஆனால், இந்த அரசு மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. சத்துணவு ஆயா வேலை முதல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணியிடம் வரை அனைத்து துறைகளிலும் முறைகேடுகளை நிகழ்த்தியதுதான் ஓராண்டு சாதனையாக உள்ளது. தமிழகத்தைப் பாதிக்கும் என ஜெயலலிதா எதிர்த்த உதய் மின் திட்டம், உணவு பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட எல்லாத் திட்டங்களுக்கும் ஆதரவளித்து தற்போதுவரை  பா.ஜ.க-வின் கைப்பாவை அரசாகத்தான் எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள 21 பல்கலைக்கழகங்களில் 17 பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிட நியமனத்திலும் ஊழல் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

ஏற்கெனவே நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவிக்கபட்ட திட்டங்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை. இதில் இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த இருக்கிறார்கள். சட்டசபையில் திருவள்ளுவர், காந்திஜி, பெரியார், அண்ணா,  உள்ளிட்ட 10 பேரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில், 3 பேர் மட்டுமே முன்னாள் முதல்வர்கள். ஜெயலலிதா முன்னாள் முதல்வர் என்றாலும், உச்ச நீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் உருவப்படத்தை சட்டசபையில் வைத்துள்ளதை எதிர்க்கிறோம்'' என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க