வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (16/02/2018)

கடைசி தொடர்பு:16:40 (16/02/2018)

``நாங்கள் கேட்டது கிடைத்துவிட்டது'' - காவிரி தீர்ப்பால் நாராயணசாமி மகிழ்ச்சி

“கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தாலும் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து செயல்பட வேண்டும்” என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, “காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய இறுதி தீர்ப்பில், நீண்ட காலமாகப் புதுச்சேரி மாநிலம் கேட்டு வந்த 7 டி.எம்.சி நீரை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதோடு இந்தத் தீர்ப்பை புதுச்சேரி மாநிலம் ஏற்றுக்கொள்கிறது. இதன்மூலம் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் விவசாயம் செழிக்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தேவையான காலத்துக்கு நீரைக் கொடுக்க காவிரி மேலாண்மை வாரியத்தால் மட்டுமே முடியும். இனியும் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் கர்நாடகத்திடம் கையேந்தும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்தக் கூடாது. கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் நீரைப் புதுச்சேரிக்கு தமிழக அரசு முறையாகத் தர வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தாலும் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார். அப்போது அவரிடம் பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருவது குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு, ”பிரதமர் மோடி வருகிற 24-ம் தேதி ஆரோவில் 50-ம் ஆண்டு பொன் விழாவில் பங்கேற்க புதுச்சேரி வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. புதுச்சேரிக்கு வரும் பிரதமர் மோடியை அமைச்சர்களுடன் சென்று சந்தித்து மாநிலத்துக்கு முறையாக வழங்க வேண்டிய 6,675 கோடி  ரூபாய் நிதியைக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்த இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க