வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (16/02/2018)

கடைசி தொடர்பு:17:00 (16/02/2018)

``டெல்லியை ஸ்தம்பிக்க வைப்போம்'' - காவிரி தீர்ப்பால் எச்சரிக்கும் அய்யாக்கண்ணு

''இனியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு இழுத்தடித்தால் டெல்லியை ஸ்தம்பிக்க வைப்போம்'' என்று எச்சரிக்கிறார் விவசாயச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு.
 
காவிரி- அய்யாக்கண்ணு
 
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு நம்மிடம் பேசுகையில், "கடந்த 2007-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் கர்நாடகாவின் மழைப்பொழிவை ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறியது. ஆனால், அப்போது கர்நாடகா விளைநிலங்களை 19,90,000  ஏக்கராக கூட்டியது. ஆனால் தமிழகத்தின் விளைநிலம் 25 லட்சம் ஏக்கராகக் குறைந்தது. தொடர்ந்து காவிரி தண்ணீர் எவ்வளவு இருக்கிறது என்பதையும், மத்திய அரசு அலுவலர் கொண்டு கர்நாடகாவின் மழைப்பொழிவை ஆய்வு செய்யவில்லை. அதோடு காவிரி மேலாண்மை வாரியத்தையும் மத்திய அரசு அமைக்கவில்லை. கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவு வழங்கியது. அந்தத் தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இந்நிலையில் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது. அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், காவிரி கர்நாடகாவுக்குச் சொந்தமல்ல பொதுவானது எனக் கூறியுள்ளது அதுதான் நமக்கு கிடைத்த வெற்றி.
 
மேலும், அந்தத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கணும் என வலியுறுத்தியுள்ளது. அந்த வகையில் பிரச்னை தீர்ந்துவிடும். காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் தண்ணீர் கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட்டதுபோல் இனியும் நடக்காது. முன்புபோல் தமிழகம் 45 லட்சம் ஏக்கர் சாகுபடிக்கான தண்ணீர் கிடைக்கும். கர்நாடகாவில் ஏற்கெனவே வழங்கிய 20 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்திட தண்ணீர் வழங்க வேண்டும். ஒருவேளை தண்ணீர் மிச்சம் இருந்தால், அந்தத் தண்ணீரை இருமாநிலங்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்படியானால் கூடுதல் தண்ணீர் கிடைக்கும்.
 
கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம், தமிழகத்துக்கு 192 டி எம்.சி. தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்த நிலையில்  தற்போது 177.25 டி.எம்.சி தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும்  என்பதால் தமிழகத்துக்கான தண்ணீர் குறைந்துவிட்டது என்கிற கருத்து உள்ளது. மேலும், இன்று வெளியான தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யக் கூடாது எனக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. தண்ணீர் மிச்சம் இருந்தால், அந்தத் தண்ணீரை இரு மாநிலங்களும் பிரித்து எடுத்துக்கொள்ளலாம் என்பதால் 50 டி.எம்.சி கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது ஒண்ணுமில்லாததற்கு இந்தத் தீர்ப்பு நமக்கு நன்மைதான். வழக்கம்போல காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு ஓட்டுக்காக அமைத்து ஏமாற்ற நினைத்தால்  விவசாயிகளை ஒருங்கிணைத்துப் போராடுவோம். டெல்லியை ஸ்தம்பிக்க வைப்போம்" என்றார்.
 
 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க