அரசியல் வளர்ச்சியை சீர்குலைக்க சதி செய்கிறார்கள் - போலி ரெய்டு குறித்து மாதவன் | Madhavan clarifies his stand on fake raid issue

வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (16/02/2018)

கடைசி தொடர்பு:17:00 (16/02/2018)

அரசியல் வளர்ச்சியை சீர்குலைக்க சதி செய்கிறார்கள் - போலி ரெய்டு குறித்து மாதவன்

 "தீபாவுடன் இருப்பவர்கள் அவருக்கு சதி செய்கிறார்கள்" என்று மாதவன் தெரிவித்தார். 

தீபா

 

தீபா வீட்டிற்குள் கடந்த 10 ம் தேதி வருமான வரி அதிகாரி என்று கூறிக்கொண்டு மிதேஷ்குமார் என்பவர் நுழைந்தார். தீபா வீட்டில் உள்ளவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் மிதேஷ்குமார் தப்பியோடினார். அதன்பிறகு மாம்பலம் போலீஸில் சரணடைந்த அவர், பல மாறுப்பட்ட தகவல்களை தெரிவித்தார். விசாரணையில் அவரது பெயர் பிரபாகரன், புதுச்சேரியைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. போலீஸிடம் பிரபாகரன், தீபாவை மிரட்ட மாதவன் சொல்லிதான் அங்கு ஐ.டி அதிகாரி போலச் சென்றேன் என்று தெரிவித்ததாகச் சொல்லப்பட்டது. இதனால், மாதவன் மீது போலீஸாரின் சந்தேகப்பார்வை விழுந்தது. அடுத்து, பங்கு சந்தையில் எனக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தீபா வீட்டுக்குள் நுழைந்து நகை, பணத்தை திருட திட்டமிட்டதாக பிரபாகரன் தெரிவித்தார். பிரபாகரனின் முரண்பட்ட தகவல் போலீஸாருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது. தற்போது பிரபாகரன் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். 

போலீஸார் தேடுவதால் மாதவன் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல் வெளியானது. பிரபாகரன் குறித்து விளக்கம் கேட்க அவரிடம் பேசினோம். அப்போது அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

 தீபா கணவர் மாதவன்

தீபா வீட்டுக்குள் நுழைந்த பிரபாகரன் உங்கள்மீது பகிரங்கக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளதே?

 "கடந்த 10ம் தேதிதான் பிரபாகரனை முதல் முறையாக நான் சந்தித்தேன். அதிகாலை 5.30 மணியளவில் அவர் வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால், என்னை 6.45 மணிக்குத்தான் சந்தித்தார். ஒரு மணி நேரத்துக்கு மேல் அவர் அங்கு என்ன செய்தார் என்று தெரியவில்லை. வீட்டுக்குள் நுழைந்த அவர் காட்டிய சர்ச் வாரன்ட்டை பார்த்து ஐ.டி. அதிகாரி என்றுதான் நம்பினேன். என்னுடைய போனில் தீபாவிடம் ஐ.டி.அதிகாரி பேசினார். அவர் என்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. அடுத்து வீட்டுக்கு வந்த வழக்கறிஞர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஐ.டி. அதிகாரியால் பதில் சொல்ல முடியவில்லை. இதனால், வீட்டிலிருந்து தப்பியோடிவிட்டார். அதற்குள் மாதவன் ஏற்பாட்டில் போலி ஐ.டி. அதிகாரி வந்ததாகச் செய்திகள் வெளியாகின. இது, திட்டமிட்ட சதி. ஐ.டி அதிகாரியாக நடித்தவர், போலீஸில் சரண்டராகுவதற்கு முன்பே அவரது வாக்குமூலம் வீடியோ எடிட் செய்து வெளியில் வந்துவிட்டது. அந்த வீடியோவை வெளியிட்டவர்கள் யார் என்பதை போலீஸார் கண்டறிய வேண்டும். மேலும், என்மீது பழிசுமத்தியவர்கள், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் உள்ள சிலர்தான் என்ற சந்தேகம் உள்ளது. இதனால்தான் இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். போலீஸாரின் விசாரணையில்தான் அவரது பெயர் பிரபாகரன் என்பது எனக்குத் தெரியும்" 

நீங்கள் கூரியரில் போலியாக ஐ.டி. கார்டு, சர்ச் வாரன்ட்டை அனுப்பியதாக பிரபாகரன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளாரே?

 "சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்தில் போலீஸார் விசாரணை நடத்திய போது பிரபாகரன் தெரிவித்த குற்றச்சாட்டு நிரூபணமாகவில்லை. மேலும், நான் எதற்காக தீபா வீட்டுக்கு அவரை ஐ.டி அதிகாரி போல நடிக்கச் சொல்ல வேண்டும். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சிலர் இருக்கின்றனர். இது, என்னுடைய அரசியல் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் செய்த வேலை. விசாரணை முடிவில் எல்லா உண்மைகளும் வெளியில்வரும் என்று நம்புகிறேன்"

ஐடி அதிகாரியாக நடித்த பிரபாகரன் 

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தீபாவுடன் நீங்கள் பேசினீர்களா?

 "சம்பவம் நடந்தபிறகு தீபாவிடம் போனில் பேசினேன். அப்போது, அவர் நடந்த சம்பவத்தைக் கேட்டு தெரிந்துகொண்டார். ஆனால், அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. எங்களுக்குள் எந்த மனவருத்தமும் இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை தீபா தொடங்கினார். அதற்கு உறுதுணையாக இருந்தேன். அதன்பிறகு எம்.ஜி.ஆர். ஜெ.ஜெ திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்து நடத்திவருகிறேன். நான் சொல்லும் சில விஷயங்களின் உண்மையை தீபா ஏனோ புரிந்துகொள்ளாமல் இருக்கிறார். அவர் அருகில் இருப்பவர்களில் சிலர் குள்ளநரிக்கூட்டத்தினர் என்பதை விரைவில் தீபா புரிந்துகொள்வார்" 

பிரபாகரன் வழக்கு தொடர்பாக போலீஸார் உங்களிடம் விசாரணை நடத்தினார்களா?

 "நான் கொடுத்த புகாரில் பிரபாகரனிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். பிரபாகரன் என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தெரிவித்ததாகச் செய்திகள் வெளிவந்த நிலையிலும் போலீஸார் பொறுமையாக இந்த வழக்கை திறம்பட விசாரித்துவருகின்றனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்கூட பிரபாகரன், எனக்கு எதிராக எந்த வாக்குமூலமும் கொடுக்கவில்லை என்று கேள்விப்பட்டேன். இந்த வழக்கு தொடர்பாக போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க நான் தயாராக உள்ளேன். ஏனெனில் பிரபாகரனை தீபா வீட்டுக்கு அனுப்பியவர்கள் யார் என்று தெரியவேண்டும். எனக்கும் பிரபாகரனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் இதுவரை என்னிடம் போலீஸார் பிரபாகரன் தொடர்பாக விசாரணை நடத்தவில்லை"

 ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக் கமிஷன் எப்படிச் செயல்படுகிறது?

 "இதற்கு விசாரணைக் கமிஷன் முடிவில்தான் பதில்சொல்ல முடியும். விசாரணைக் கமிஷனுக்கு சில அதிகாரம் இல்லை. எனவே, சி.பி.ஐ. விசாரித்தால் சாலச்சிறந்ததாக இருக்கும்"

 உங்களுடைய அரசியல் பயணம் எப்படி  உள்ளது?

 "தமிழகத்தில் பல மாவட்டங்களில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். ஆனால், பிரபாகரனின் புதுச்சேரிக்கு இதுவரைச் செல்லவில்லை. விடுப்பட்ட மாவட்டங்களில் அடுத்தகட்டமாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். அரசியலில் என்னுடைய வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் என்மீது அவதூறுகளைப் பரப்பிவருகின்றனர்"


 


டிரெண்டிங் @ விகடன்