காவிரி தீர்ப்பு எதிரொலி! - ஊட்டியில் கர்நாடக வாகனங்களுக்குத் `தடா' | Cauvery Verdict; Karnataka Vehicles Banned to Cross Tamil nadu Border

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (16/02/2018)

கடைசி தொடர்பு:18:00 (16/02/2018)

காவிரி தீர்ப்பு எதிரொலி! - ஊட்டியில் கர்நாடக வாகனங்களுக்குத் `தடா'

காவிரி பிரச்னை தீர்ப்பின் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி கக்கனல்லாவில் இருமாநில எல்லைக்குள் நுழைய வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. 

தடை

 
தமிழகத்தின் மிக முக்கிய பிரச்னையாகக் கருதப்படும் காவிரி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த கக்கனல்லா வனத்துறை சோதனைச் சாவடியில் டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழக எல்லைக்குள் நுழைய முயன்ற கர்நாடகப் பதிவு எண் கொண்ட வாகனங்களைப் போலீஸார் திருப்பி அனுப்பினர்.

அதே போல தமிழகப் பதிவுஎண் கொண்ட வாகனங்கள் கர்நாடக எல்லைக்குள் நுழைய அனுமதியளிக்கப்படவில்லை. பெங்களூர், மைசூர் உள்ளிட்ட கர்நாடகப் பகுதிகளிலிருந்து ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்குச் சுற்றுலா வந்த பயணிகள் கர்நாடக எல்லையில் இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் கர்நாடக எல்லைப் பகுதியிலிருந்து நடந்து, தமிழக எல்லையான கக்கனல்லா சோதனைச் சாவடியைக் கடந்து அங்கு பயணிகளை ஏற்றிச் செல்ல காத்திருந்த ஜீப்களில் கூடலூர் வரை பயணித்தனர்.  

தடை


அதேபோல, ஊட்டியிலிருந்து மைசூர், பெங்களூர் சென்ற தமிழக அரசுப் பேருந்துகளும் கக்கனல்லா சோதனைச் சாவடியிலிருந்து கர்நாடக எல்லைக்குள் அனுமதிக்கப்படவில்லை. கர்நாடகப் பயணிகள் கர்நாடக எல்லைக்கு நடந்து சென்று அங்கிருந்த கர்நாடக வாகனங்களில் பயணத்தைத் தொடர்ந்தனர். போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “தீர்ப்பின் பரபரப்பு குறையும் வரை, வாகனங்கள் எல்லையைத் தாண்டி செல்லவும் உள்ளே நுழையவும் அனுமதியளிக்கப்படாது” என்றனர். 

- அருண்


[X] Close

[X] Close