ரவுடி-போலீஸ் ரகசியக் கூட்டணி! - காட்டிக் கொடுத்த சி.சி.டி.வி

 சம்பத்குமார் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்

போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டவரை எதிர்தரப்பினர் போலீஸார் உதவியுடன் மிரட்டும் வீடியோ சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சம்பத்குமார். மூத்த குடிமகனான இவர், அறக்கட்டளை ஒன்றில் நிரந்தர அறங்காவலராக இருந்துவருகிறார். இவர்மீது சில மாதங்களுக்கு முன்பு மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பத்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சம்பத்குமார் போலீஸ் காவலில் எடுக்கப்பபட்டார். அப்போது, சம்பத்குமாருக்கு எதிராக நடந்த சம்பவத்தை பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. வீடியோவைப் பார்த்த சென்னை உயர்நீதிமன்றம், அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

 சி.சி.டி.வி கேமரா காட்டிக் கொடுத்த சம்பவம் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் சம்பத்குமாரின் நண்பர் ஆனந்த். 

 சம்பத்குமார்"சம்பத்குமாரின் குடும்பத்தினர், தங்களுடைய சொத்துகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு பல உதவிகளை ஏழை, எளியவர்களுக்குச் செய்துவருகின்றனர். இதற்காக அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையில் சம்பத்குமார், நிரந்தர அறங்காவலராகவும் செயலாளராகவும் இருந்துவருகிறார். மேலும், அறக்கட்டளையில் சம்பத்குமாரின் உறவினர்கள் சிலர் அறங்காவலர்களாக உள்ளனர். அறக்கட்டளைக்குச் சொந்தமான கட்டடங்கள் பழுதடைந்ததால் புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான பணிகள் நடந்துவருகின்றன. அதில் அறக்கட்டளைக்கும் பில்டிங் கட்டித்தருபவர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இதன்விளைவு சம்பத்குமாரை மிரட்ட அவரது சகோதரி மூலம் மயிலாப்பூர் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரில் சம்பத்குமாரை கைது செய்த போலீஸார், அவரை போலீஸ் காவலிலும் எடுத்தனர். போலீஸ் காவல் முடிந்து அவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டு, போலீஸ் அதிகாரிகள் துணையுடன் ரவுடிக் கும்பல் சம்பத்குமாரை மிரட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சம்பத்குமார், நடந்த சம்பவத்தை வழக்கறிஞர்களிடம் தெரிவித்துள்ளார்.

 
 இதையடுத்து சம்பத்குமார் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் இன்பென்ட் தினேஷ், பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி, வீடியோ காட்சிகளை ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்பித்தார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம், 8 வாரத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி உள்ளிட்டவர்களை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு, சம்பத்குமார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதிலும் தடை உத்தரவிட்டுள்ளது. அறக்கட்டளைக்குச் சொந்தமாக சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் செயல்படுவோர்களுக்கு உதவிய போலீஸ் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். 

இந்த வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் இன்பென்ட் தினேஷ் கூறுகையில், "சம்பத்குமார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலீஸார்,வழக்கறிஞர் இன்பென்ட் தினேஷ் எல்லை மீறி நடந்துள்ளனர். நீதிமன்றத்தில் சம்பத்குமாரை போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்தபோது, சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி, எதிர் தரப்பினருக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளது சி.சி.டி.வி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதாவது, சம்பத்குமாரை எதிர்தரப்பினர் மிரட்டியுள்ளனர். நீதிமன்றத்துக்கு அழைத்துவரும்போது போலீஸ் வாகனத்திலிருந்து சம்பத்குமாரை இறக்கி, இன்னொரு காரில் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

அப்போது, சம்பத்குமாரிடம் போலீஸ் அதிகாரி முன்னிலையிலேயே அறக்கட்டளை தொடர்பான சில ஆவணங்களில் கையெழுத்துப்போடும்படி மிரட்டியும் உள்ளனர். இது, சட்டத்துக்கு விரோதமானது. மேலும், சம்பத்குமார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும் விசாரிக்க நீதிமன்றம் தடை பிறப்பித்துள்ளது. எல்லை மீறிய போலீஸ் அதிகாரி மற்றும் எதிர்தரப்பினரை 8 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த அறிக்கையில் திருப்தியில்லை என்றால் சி.பி.ஐ. விசாரணை கோருவோம். மேலும், போலீஸுக்கு எதிராக சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் உள்ளன" என்றார். 

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சம்பத்குமார் மீது அவரது சகோதரி கொடுத்த புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவின்பேரில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுத்தோம். அவர் பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. சம்பத்குமாரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற போது, போலீஸ் வாகனம் பழுதாகியுள்ளது. இதனால் வேறுவாகனத்தில் அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அந்த வீடியோ பதிவைத்தான் சம்பத்குமார் தரப்பினர் ஆதாரமாக வைத்துள்ளனர். நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு அறிக்கை சமர்பிக்கப்படும். விசாரணை முடிவில்தான் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீதுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லமுடியும்" என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!