வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (16/02/2018)

கடைசி தொடர்பு:19:00 (16/02/2018)

காவிரி தீர்ப்பில் தமிழகத்துக்குத் துரோகம்! - அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் காட்டம்

பொன்ராஜ்

அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வெளியிட்ட அறிக்கையில், “ 77 டி.எம்.சி கூடுதலாக கேட்ட நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு 14.75 டி.எம்.சி நீர் குறைப்பு தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம். உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் குற்றம்சாட்டப்பட்ட தலைமையிடமிருந்து இப்படி அரசியல் நிலைப்பாடு கொண்ட ஓர் அறிவார்ந்த ஒப்புமைக்கு ஒவ்வாத நிலத்தடி நீரைக் காரணம்காட்டி அளிக்கப்பட்ட தீர்ப்பைத் தவிர, வேறு என்ன எதிர் பார்க்க முடியும். சரி இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமா. அதை உடனடியாக அமைக்காவிட்டால் அதை அமைக்க வைக்கும் வல்லமை தீர்ப்பை அளித்த நீதிமன்றத்திற்கு உண்டா?
நிலத்தடி நீரைக் காரணம் காட்டிய உச்ச நீதிமன்றம், தமிழகத்தின் உரிமையான நீரை கர்நாடகாவில் ஒரு வருடத்துக்கு தேக்கி வைப்பதால் கூடும் நிலத்தடி நீரைக் கணக்கீடு செய்துள்ளதா. அப்படி கணக்கீடு செய்யவில்லை என்றால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 177.25 டி.எம்.சி நீரை ஒரு நாள்கூட கூடுதலாக வைத்திருந்தால் அது தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதி அல்லவா. அந்த 177.25 டி.எம்.சி தண்ணீர் உடனடியாக வந்தால் அது தமிழ் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பை ஓரளவு ஈடுகட்டுமே என்று ஏன் உச்ச நீதிமன்றம் சிந்திக்கவில்லை.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை என்றுமே மதிக்காத கர்நாடகம், இந்த 177.25  டி.எம்.சி நீரை மாத மாதம், அல்லது வருடக் கடைசியில் விட வேண்டும் என்ற தீர்ப்பே தவறானது என்பதுதான் உண்மை. காவிரி நீரின் ஒட்டுமொத்தக் கொள்ளளவு அதிகமாக இருக்கிறபடியால், வருடம்தோறும் நீர் விட வேண்டும் என்பது அநீதி. எனவே, தமிழகத்து உரிமையான நீரை உடனே திறந்துவிட வேண்டும். அதை அமைக்கப்படவிருக்கிற காவிரி மேலாண்மை வாரியத்தில் கேட்டு மாற்றியமைத்து தமிழகத்தின் உரிமையைத் தமிழக அரசு நிலை நாட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.