`கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினார்கள்' - நீதிபதியிடம் குமுறிய கணபதி

கணபதி

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் என்னிடம் கையெழுத்து வாங்கியதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தில் துளியும் உண்மை இல்லை என்று துணைவேந்தர் கணபதி கோவை ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்ற நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு 30 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கும்போது கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், துணைவேந்தர் கணபதியை மட்டும் நான்கு நாள்கள் காவலில் எடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின்னர், இன்று மாலை கோவை ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் கணபதி.

இதைத் தொடர்ந்து, நீதிபதி ஜான்மினோ துணைவேந்தர் கணபதியை மார்ச் 2-ம் தேதி வரை  நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். அப்போது  நீதிபதியிடம், போலீஸ் கஸ்டடியின்போது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தன்னை மனரீதியாக துன்புறுத்தினார்கள். நான் 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக என்னைக் கட்டாயப்படுத்தி காவல்துறையினர் கையொப்பம் வாங்கினார்கள். ஆகையால், போலீஸ் சமர்ப்பித்துள்ள வாக்குமூலத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கணபதி தெரிவித்தார்.

இந்நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக அவரது தரப்பு வழகறிஞர் ஞானபாரதி தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!