`விபரீதமான ஒருதலைக் காதல்' - நடுரோட்டில் மாணவிமீது பெட்ரோல் ஊற்றிய வாலிபர்

மதுரையில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியைப் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி நடந்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

மதுரை திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டையில்  மணிப்பாண்டி, பேச்சியம்மாள்  தம்பதி வசித்துவருகின்றனர். இவர்களின் மகள் பிரியா (பெயர் மாற்றம்). வயது 14.  திரளியை அடுத்த அச்சம்பட்டியில் உள்ள அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறார்.

நடுவக்கோட்டையைச் சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் பாலமுருகன். வயது 23. இவர் தனியார் மில்லில் வேலை செய்துவருகிறார் . இவர் மாணவி பிரியாவை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். நேற்று காதலர் தினத்தன்று தனது காதலை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று மாணவியிடம் உறுதியாகக் கேட்டுள்ளார் பாலமுருகன். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் இன்று மாலை மாணவி பள்ளி முடிந்து பஸ்சுக்காகக் காத்திருந்தபோது இரு சக்கர வாகனத்தில் அந்தப் பகுதிக்கு வந்தார்.  தன்னிடம் இருந்த 2 லிட்டர் பெட்ரோலை மாணவியின் உடலில் ஊற்றி தீயைப் பற்ற வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். 

காயம் அடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் மருத்துவமனையில் முதலுதவி வழங்கிய பின், மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து மாணவி தீக்காயப்பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பாலமுருகன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!