`காவிரி தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது!' - ரஜினி கருத்து | Rajini Says that Cauvery Verdict Makes him Disappointed

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (16/02/2018)

கடைசி தொடர்பு:20:00 (16/02/2018)

`காவிரி தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது!' - ரஜினி கருத்து

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

Rajini


தமிழ்நாடு - கர்நாடகா இடையில் நடக்கும் காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை தொடர்பான வழக்கில்  உச்ச நீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கியது. `காவிரி நதிநீரை யாரும் உரிமை கொண்டாட முடியாது. எந்த மாநிலத்துக்கும் அதற்கு உரிமையில்லை’ என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன் தீர்ப்பில் குறிப்பிட்டார். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. இது காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பைவிடவும் 14.5 டி.எம்.சி குறைவாகும். தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. `இதுவே இறுதித் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்குச் செல்லும். மேல்முறையீடு செய்ய முடியாது’ என உச்ச நீதிமன்றம் உறுதியாகத் தெரிவித்துவிட்டது.

காவிரியில் தமிழகத்தின் பங்கை உச்ச நீதிமன்றம் குறைத்திருப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள், விவசாயிகள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அனைவரும் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் என்ன கருத்து சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. காவிரி தீர்ப்பு பற்றி தன் ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், “காவிரி நீர் பங்கீட்டில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மறு பரிசீலனை மனுத்தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.


[X] Close

[X] Close