மாங்குரோவ் காடுகளாகும் காவிரி டெல்டா! - எச்சரிக்கும் சூழல் ஆர்வலர்கள்

காவிரி டெல்டா பகுதியில் உப்பு நீர் உள்ளே புகுவதால் மாங்குரோவ் காடுகள் அதிகரித்து வருவதாகச் சூழலியல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். 

காவிரி



`சோழ நாடு சோறுடைத்து...' என்பது பிரபலமான சொலவடை. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் அன்றைய சோழநாடான காவிரி டெல்டாவில் இருக்கிறது. அந்தப் பகுதிக்கு தமிழக வரலாற்றில் முக்கிய இடமிருக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதியே தமிழகத்தின் இன்றைய உணவுத்தேவையில் 30 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்கிறது. ஆனால், தமிழகத்துக்கு உணவிடும் அந்தப் பகுதி விவசாயிகளின் அன்றாடங்கள் கண்ணீருடன் கழிவது துயர முரண். ஏற்கெனவே, தண்ணீர் பிரச்னையில் தள்ளாடும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இன்னொரு இடியாக வந்திருக்கிறது, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. காவிரியில் தமிழகத்தின் பங்கை 192 டி.எம்.சி-யிலிருந்து 177.25 டி.எம்.சி-யாகக் குறைத்து ஆணையிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். காவிரியில் 192 டி.எம்.சி. தண்ணீர்  தமிழகத்துக்கு தர வேண்டுமென்பது 2007- ம் ஆண்டு  காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த ஆணை ஆகும். நடுவர் மன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியபோது, தமிழகத்தின் 20 சதவிகித நிலத்தடி நீர் இருப்பைக் கணக்கில் கொள்ளவில்லை என்பதைக் காரணம் காட்டி தமிழகத்தின் பங்கை உச்ச நீதிமன்றம் இப்போது குறைத்திருக்கிறது. பொதுவாக எப்போதும் உச்ச நீதிமன்ற ஆணையைக் காற்றில் பறக்கவிட்டு தமிழகத்துக்குத் தண்ணீர் தராமல் தவிக்கவிடும் கர்நாடக அரசு, இந்தத் தீர்ப்பை ஏற்று நடக்குமா என்பதும் சந்தேகம்தான். 

டெல்டா



காவிரி டெல்டா பகுதியில் இன்று பலரும் விவசாயத்தைவிட்டு வெளியேறி வருகிறார்கள். விவசாய நிலங்களின் பரப்பளவு குறைந்து வருகிறது. தரிசு நிலங்கள் அதிகரித்து வருகின்றன. பருவ நிலை மாற்றம், மழை இல்லாமை, தண்ணீர் தட்டுப்பாடு ஆகியவை விவசாயிகளை இந்த நிலை நோக்கித் தள்ளியுள்ளன. இந்தியன் கவுன்சில் ஆஃப் சோசியல் சயின்ஸ் ரிசர்ச் என்ற அமைப்பின் நிதியுதவியுடன், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஜனகராஜன் காவிரி டெல்டா பகுதியில் ஆய்வு மேற்கொண்டு 2016-ம் ஆண்டில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். காவிரி டெல்டாவில் விவசாயம் நொடிந்து வருவதாக எச்சரித்ததோடு, அதற்கான காரணங்களும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த விஷயங்களைத் தவிர்க்கவோ தடுக்கவோ அரசுகள் நடவடிக்கை எடுப்பதாக இல்லை. தண்ணீர் கிடைக்காதது ஒரு பிரச்னை என்றால், ஆளும் அரசு மற்றும் தனிநபர்களின் அலட்சியங்களும் விவசாயத்தைச் சீரழிப்பதில் எந்த அளவுக்கு துணை நிற்கின்றன என்பதற்கான ஆவணமாக அந்த அறிக்கை வரலாற்றின் முன்பு நின்றுகொண்டிருக்கிறது. அதுபற்றி சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் புகழேந்தி நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் வருமாறு:
 

காடுகள்



Doctor“1970 முதல் 2014-ம் ஆண்டுவரையிலான காலத்தில் காவிரி டெல்டா பகுதியில் பயிர்ச்சாகுபடி பரப்பரளவு 27 சதவிகிதம் குறைந்திருக்கிறது. தரிசு நிலம் 13 மடங்காக அதிகரித்திருக்கிறது. பருவநிலை மாற்றமும் தண்ணீர் பற்றாக்குறையும் இதற்குக் காரணங்கள். அத்தோடு காவிரி டெல்டா பகுதியில் அலையாத்திக் காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகள் 14 மடங்கு அதிகரித்திருக்கின்றன. இது விவசாய  நிலத்தை பாதிக்கும் விஷயமாகும். ஏனெனில் உப்பளங்களிகளில்தான் அலையாத்திக் காடுகள் வளரும். ஆக, காவிரி டெல்டா பகுதி மெல்ல மெல்ல கடல் நீர் புகுந்து உப்பளங்களியாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இது தொடர்ந்தும், இதைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. மேலும், இந்தப் பகுதிகளில் இறால் பண்ணைகள் அதிகரித்துள்ளன. இது அந்தப் பகுதியை மேலும் உப்புப்பிரதேசமாக்கி வருகிறது.

அலையாத்தி காடுகள் அதிகரிப்பது காவிரி டெல்டாவுக்கு நல்ல சகுனம் அல்ல. கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பகுதியில் கால்நடைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. விவசாயத்துக்கும் கால்நடைகளுக்குமான உறவு அறுபடுவதையே இது காட்டுகிறது. காவிரி தண்ணீர் மட்டுமே விவசாயத்துக்கு வில்லனாகி வரவில்லை. அதுவொரு முக்கியப் பிரச்னை என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதேசமயம், இதுபோன்றவற்றைப் பற்றியும் நாமெல்லாம் விவாதிக்க வேண்டும். விழிப்பு உணர்வு உருவாக்க வேண்டும்” என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!