அப்பா, அம்மாவை நல்லா பார்த்துக்கங்க, மாணவர்களுக்கு அறிவுரை செய்த கார்த்தி

 




'பசங்க' இயக்குநர் பாண்டிராஜ் படித்த விராச்சிலை ஸ்ரீ.பெரி.மெ. மெய்யப்ப செட்டியார் நடுநிலைப் பள்ளியில் இன்று 4-ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. இதில் இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் பள்ளிக்கு நடிகர் கார்த்தி ஒரு லட்சரூபாய் நிதி அளிப்பதாக அறிவித்தார். மாணவர்களுக்கு,"ஊரைச் சுத்தமாக வெச்சுக்கங்க"என்று அறிவுரையும் வழங்கினார்.



புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் உள்ள மெய்யப்ப செட்டியார் நடுநிலைப் பள்ளியில் இன்று நான்காம் ஆண்டு விளையாட்டுப் போட்டி நடந்தது. அதில் கலந்துகொண்டு மாணவர்களுடன் பேசினார் நடிகர் கார்த்தி. அந்தப் பள்ளியில் படித்த இயக்குநர் பாண்டிராஜ்  மேடையில் அமர்ந்து அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தார். நடிகர் கார்த்தியைப் பார்த்த பள்ளி  மாணவர்கள் உற்சாகமாக இருந்தார்கள். அவர்களுடன் மிக இயல்பாகப் பேசினார் கார்த்தி. "தாய்மொழிக்கல்வியில் இந்தப் பள்ளி காட்டும் ஆர்வம், அக்கறை குறித்து நான் கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷமடைந்தேன்.

 

தாய்மொழிவழிக்கல்வியில் படிப்பவர்கள்தாம் சமுதாயத்தில் பெரிய உயரத்தையும் வெற்றியையும் பெற்றிருக்கிறார்கள். இதுபோல ஒரு சாதாரண பள்ளியில் படித்தவர்தான் என்னோட அப்பா. அவர் தாய்மொழிக்கல்வியில் படித்ததால்தான் பெரிய ஆளா ஆனார். நாங்க இந்த நிலைமைக்கு வரக்காரணமும் அவர்தான். அம்மா, அப்பாவுக்கு நீங்களெல்லாம் மரியாதை கொடுக்க வேண்டும். அவங்க சொல்றதை நீங்க கேட்கணும். அவங்களை நீங்க நல்லா பார்த்துக்கணும். அப்பா அம்மாவை நல்லா பார்த்துகிட்டாலே நீங்க நல்லா இருப்பீங்க. வாழ்க்கையில ஜெயிப்பீங்க. இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிக்கு வந்து உங்களை எல்லாம் நான் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். அதுபோல ஒழுக்கமா இருங்க. ஆசிரியர்களுக்கும் நீங்க படிக்கிற ஸ்கூலுக்கும் மரியாதை கொடுங்க. இதையெல்லாம் நீங்களும் பண்ணிணா. நாளைக்குப் பெரிய ஆளா வரலாம். உங்க ஸ்கூல்ல அப்படி படிச்சவருதான் இன்னிக்கு இப்படி சினிமாவுல பெரிய ஆளா வந்திருக்காரு"என்று பாண்டிராஜை குறிப்பிட்டுப் பேசினார்.

 

இறுதியாக, “உங்கள் ஊரைச் சுத்தி குப்பைகள் இருக்கறதைப் பார்த்தேன். ஊரை நீங்கதான் சுத்தமா வெச்சுக்கணும். ப்ளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்கணும். இந்தக் காரியத்தை எல்லாம் பெரியவங்ககிட்ட சொன்னா, கேட்க மாட்டாங்க. சின்னப் பசங்க நீங்கதான் இதையெல்லாம் ஆர்வமா செய்யணும். அடுத்தமுறை சாக்லெட் சாப்பிட்டுட்டு, அதை வீசி எறியும் போது யோசிக்கணும். இப்படி பண்றது தப்புன்னு புரிஞ்சுக்கணும். கடைகளுக்குப் பொருள்கள் வாங்கப் போகும்போது, அங்கேதான் ப்ளாஸ்டிக் பை தருவாங்களேன்னு நினைச்சுப் போகாம, வீட்டிலிருந்தே துணிப்பையை நீங்க எடுத்துகிட்டு போகணும். இந்தப் பழக்கத்தை நீங்க விட்டுடாம கடைபிடிக்கணும். அதுபோல் ஊரைச் சுத்தமா வெச்சிருக்கணும். ஊர்ல எங்க குப்பைகள் இருந்தாலும் நீங்க எடுத்து குப்பைத்தொட்டியில் போடவேண்டும். அடுத்த தடவை உங்க ஊருக்கு நான் வரும்போது, ஊர் சுத்தமா இருக்கணும்.எல்லோரும் நல்லாபடிங்க. வாழ்க்கையில நல்லா வருவீங்க"என்றார். அந்தப் பள்ளிக்கு ரூபாய் ஒரு இலட்சம் நிதி அளிப்பதாகவும் கார்த்தி அறிவித்தார். பிறகு பாண்டிராஜூம் கார்த்தியும் ஆசிரியர், மாணவர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்கள்.

 

பள்ளித் தலைமை ஆசிரியர் முகேஷிடம் பேசினோம்." வெளியில் தெரியாமல், நிறைய நல்ல விஷயங்களை இந்தப் பள்ளிக்குச் செய்து வருகிறார் பாண்டிராஜ். நகரத்தார் மேனேஜ்மென்ட் பள்ளியாக இது செயல்பட்டாலும் தாய்மொழி வழி கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இயக்குநர் பாண்டிராஜ் போல இந்தப் பகுதியில் படித்த மாணவர்கள் தாசில்தார்களாகவும் டாக்டர்களாகவும் இருக்கிறார்கள். நடிகர் கார்த்தி இந்தப் பள்ளியைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினாராம். அதான் பாண்டிராஜ் ஆர்வமுடன் அழைத்து வந்திருக்கிறார். அவர் வளர்ச்சி நிதி அளிப்பதாக அறிவித்தது நாங்கள் எதிர்பாராத ஒன்று"என்றார். 

பாண்டிராஜ் இயக்கும் 'கடைக்குட்டிச் சிங்கம்'என்ற திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த இருபது நாள்களுக்கு மேலாக புதுக்கோட்டை நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்துவருகிறது. அதில் நடித்துவரும் கார்த்தி, ஷூட்டிங் இடைவேளையின்போது பாண்டிராஜிடம் அவரது ஊரைப் பற்றி, பள்ளியைப் பற்றி ஆர்வமுடன் விசாரித்தாராம். தான் படித்த பள்ளியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வைத்துதான் 'பசங்க' திரைப்படத்தை எடுத்ததாக பாண்டிராஜ் கூறியுள்ளார். அப்போது அந்தப் பள்ளியைப் பார்க்க ஆசைப்பட்டாராம் கார்த்தி. அதனைத் தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியருடன் பேசிய இயக்குநர், அதற்கான ஒப்புதலைப் பெற்று அழைத்து வந்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!