வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (16/02/2018)

கடைசி தொடர்பு:21:40 (16/02/2018)

“வைகைக்கு ஒண்ணும் செய்யல... தண்ணீரை மட்டும் உறிஞ்சுறாங்க!”- மதுரை மாநகராட்சிமீது பகீர் புகார்


 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பென்னிகுவிக் அரங்கில் ஆட்சித் தலைவர்  வீரராகவராவ்  மற்றும் டி.ஆர்.ஓ குணாளன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது . இதில் பேசிய விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தனர் , மேலும், பேரணை முதல் கள்ளந்தரி வரையிலுள்ள விவசாய நிலங்களுக்கு 900 கன அடி நீர் 3 நாட்களுக்கு வைகையில் இருந்து தண்ணீர் வழங்க உத்தரவிட்டதற்கு ஆட்சியருக்கு இருபோக பாசன விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். 

மழை பொய்த்துப் போனதால் மதுரை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர், கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் எனவும், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், விவசாயக்கடன் வழங்குவதில் குளறுபடி ஏற்படுகிறது எனவும் தெரிவித்தனர் . மேலும் உசிலம்பட்டி வட்டாரப் பகுதிகளில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும்
இது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டால்  விவசாயிகளையே விமர்சிப்பதாகவும் தங்களின் வேதனைகளைப் புகாராக விவசாயிகள் தெரிவித்தனர்.

வைகை  அணையில் எந்த ஒரு சீரமைக்கும் பணிகளை செய்யாமல் தண்ணீர் எடுப்பதை மட்டும் வழக்கமா வைத்துக்கொள்வதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கையில் இது தொடர்பாக ஆட்சியர் வினவினார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாநகராட்சி எந்த ஒரு பணியும் வைகைக்குச் செய்யவில்லை. நீரை மட்டும் உறிஞ்சிக்கொள்கிறது விவசாயிகள் சொல்வது உண்மை தான்”  என  தெரிவித்தனர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது.