மின்கம்பத்துக்கு மலர் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி!- நெல்லையில் நூதனப் போராட்டம்

நெல்லையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மிக மோசமான நிலையில் இருக்கும் மின் கம்பங்கள் மாற்றப்படாமல் இருப்பதைக் கண்டிக்கும் வகையில் அவற்றுக்கு மாலை அணிவித்து தமிழ் அமைப்பினர் நூதனப் போராட்டம் நடத்தி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

நூதனப் போராட்டம்

நெல்லை மாநகரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் பள்ளியின் அருகில் உள்ள மின்கம்பம் உடைந்து அதன் உள்ளே இருக்கும் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் இருக்கிறது. தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலரும் அந்தக் கம்பத்தைச் சுற்றியே விளையாடுவதால் பெரும் ஆபத்து ஏற்படும் நிலைமை இருக்கிறது. 

இதே போல் வடக்கு பஜார் உள்ளிட்ட 5 இடங்களில் மின் கம்பங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கின்றன. இவற்றை மாற்றி விட்டு புதிய கம்பங்களை வைக்குமாறு சுற்றுப்பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் பலமுறை மின்வாரியத்திடம் தெரிவித்த போதிலும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், மின் வாரியத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து மின் கம்பத்திற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. 

மின்கம்பம்தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமையில் நடந்த இந்த நூதனப் போராட்டத்தில், இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பைச் சேர்ந்த பீட்டர் த.ம.ஜ.கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜமால், பொருளாளர் சாந்தி ஜாபர், மீனவரணியைச் சேர்ந்த தாமஸ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், ’பாளையங்கோட்டையின் பல்வேறு பகுதிகளிலும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் மின் கம்பங்கள் இருக்கின்றன. அவற்றை உடனடியாக மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுவாக மின் வாரியம் ஆபத்துக்கு முன்பாக தடுப்பு நடவடிக்கையில் ஆர்வம் காட்டாமலேயே இருக்கிறது. இந்த மின் கம்பங்கள் விவகாரத்திலும் அதுவே நடக்கிறது. அவற்றின் காலம் முடிவடைந்து விட்டது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் அவை இருக்கின்றன. 

இது பற்றி மின் வாரியம் எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதால், அதிகாரிகளின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு செல்ல முடிவு செய்தோம். அதன் காரணமாகவே இந்த நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதன் பின்னராவது மின்வாரிய அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுத்து அப்பாவி சிறுவர்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்களின் உயிருடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இனியும் அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்டமாக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவதுடன், அனைத்து அதிகாரிகள் மீதும் வழக்குத் தொடருவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்’’ என்கிறார்கள். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!