கர்நாடகாவிற்கு பயந்து தமிழக வாகனங்கள் எல்லையில் நிறுத்தம்!- நிலைமை சீராவது எப்போது? | tamilnadu vehicles are stopped in Karnataka border

வெளியிடப்பட்ட நேரம்: 23:49 (16/02/2018)

கடைசி தொடர்பு:23:49 (16/02/2018)

கர்நாடகாவிற்கு பயந்து தமிழக வாகனங்கள் எல்லையில் நிறுத்தம்!- நிலைமை சீராவது எப்போது?

 போக்குவரத்து

காவிரி நதிநீர் விவகாரத்தின் இறுதித் தீர்ப்பினால் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெற்றுவிடக்கூடாது என தமிழக வாகனங்களை கர்நாடக எல்லைக்குள் நுழைய அனுமதிக்காமல் தமிழக போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இன்று காலை 10.30 மணியளவில் உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் விவகாரத்தின் தீர்ப்பு அளிக்கப்பட இருந்ததை ஒட்டி, தமிழக - காவிரி எல்லையான சத்தியமங்கலத்தை அடுத்த பன்னாரியில் நேற்று நள்ளிரவில் இருந்தே போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது. தீர்ப்பில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் தமிழர்களுக்கும், தமிழக வாகனங்களுக்கும் அசம்பாவிதம் ஏற்பட நேரிடும் என்று கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக வாகனங்களை கர்நாடக எல்லைக்குள் நுழைய அனுமதிக்காமல் தமிழக போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இந்தநிலையில், இன்று காலையில் வெளியான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கர்நாடக அரசாங்கத்திற்கு சாதகமாகவே அமைந்தது. இருந்தாலும், தற்போது வரை தமிழக வாகனங்களைக் கர்நாடக எல்லைக்குள் நுழைய அனுமதிக்காமல் போலீஸார் தடை விதித்திருக்கின்றனர். கர்நாடக பதிவெண்கள் கொண்ட வாகனங்களுக்கு மட்டும் பன்னாரியில் எந்தவித தடையுமில்லை. 

இதனால் தமிழக வாகனங்கள் பன்னாரி செக்போஸ்டிலிருந்து திருப்பி அனுப்பிவிடப்படுகின்றன. சரக்கு லாரிகள், சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

 போக்குவரத்து

எந்தவித பிரச்சினையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸார் தமிழக வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தாலும், ஒருசில வாகன ஓட்டிகள் போலீஸாரிடம் கர்நாடக எல்லைக்குள் அனுமதிக்கக் கோரி வாக்குவாதம் செய்தனர். ‘போறதுன்னா போய்க்கோ... உன் ரிஸ்க் தான்... அப்புறம் பிரச்சினைன்னா நீ தான் பாத்துக்கணும்’ என போலீஸார் அறிவுரை கூற வாகன ஓட்டிகள் புலம்பிய படியே யூ டர்ன் அடித்தனர்.

மேலதிகாரிகளிடம் இருந்து ‘அனுமதிக்கலாம்’ என்ற தகவல் கிடைத்த பிறகு போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பும் என்று கூறப்படுகிறது.