கோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிக்கு எதிராக ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்கள்

தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற வர்த்தக அணிச் செயலாளர் ஜெயக்கொடி என்பவரைக் கண்டித்து, மனிதன் ரசிகர் மன்றம் என்ற பெயரில் கோவில்பட்டி நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் மற்றும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு கிளம்பி உள்ளது. 

posters in kovilpatti

ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக வேலூர், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கடந்த பிப்ரவரி 5ம் தேதி  அறிவிக்கப்பட்டனர். தொடர்ந்து நேற்று (15.02.18) தூத்துக்குடி மாவட்டத்தில் 15 ஒன்றியப் பகுதிகளுக்கு 4 பெண்கள் உட்பட 140 நிர்வாகிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதில் கோவில்பட்டி நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட பெயர் பட்டியலில், பழைய ரஜினி ரசிகர் மன்றத்தின்   நிர்வாகிகள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர் என கோவில்பட்டி ரஜினி மக்கள் மன்றத்தினர் புகார் எழுப்பி உள்ளனர். துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்த வர்த்தக அணிச் செயலாளர் ஜெயக்கொடியின் பரிந்துரையின் படிதான் கோவில்பட்டியில் மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

posters in kovilpatti

இந்நிலையில், ”ஜெயக்கொடி கட்சியின் எந்த விதமான தகவல்களையும் அனைத்து மன்ற நிர்வாகிகளுக்கு சரியாக தெரிவிப்பதில்லை. இதைச் சரிபடுத்தவில்லை என்றால் அனைத்து மன்றங்கள் சார்பாக கண்டனப் பொதுக்கூட்டம் மற்றும் உண்ணாவிரதம் நடைபெறும்” என குறிப்பிட்டு ”மனிதன் ரசிகர் மன்றம்”  என்ற பெயரில் கோவில்பட்டி நகர் முழுவதும் போஸ்டர்களும், முக்கிய இடங்களில் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. இது ரஜினி மக்கள் மன்றத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டியைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தினரிடம் பேசினோம், “நேற்று அறிவிக்கப்பட்ட புதிய நிர்வாகிகளில் பலர் கட்சிக்கு புதியவர்கள். ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து மன்றச் செயல்பாடுகளில் இருப்பவர்களை புறக்கணித்து விட்டு ஜெயக்கொடி பரிந்துரை செய்தவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால்தான் இந்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது' என்று கூறினர். இன்னும் சிலர், “மாவட்டத்திலேயே இல்லாத ஸ்டாலினை மாவட்டச் செயலாளராக நியமித்திருக்கும் போது, ஒன்றிய நிர்வாகிகள் நியமனம் குறித்து யாரிடம் என்ன சொல்வது?” என புலம்பினர்

ரஜினியின் முழுமையான அரசியல் பிரவேசம் நிகழாத நிலையில், ரஜினி மன்றத்தில் நிர்வாக போட்டிகளும், போர் கொடிகளும் எழத்துவங்கி விட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!