கோவை சிங்காநல்லூர் குளத்தில் நாட்டு மரக்கன்றுகளின் நாற்றங்கால் தொடக்கம்!

கோவை சிங்காநல்லூர் குளத்தில், நாட்டு மரக்கன்றுகளின் நாற்றங்கால் தொடங்கப்பட்டது.

சிங்காநல்லூர்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள 19 குளங்களில் சிங்காநல்லூர் குளம் பல்லுயிர் பெருக்கத்துக்கான ஆதாரமாக உள்ளது. சிங்காநல்லூர் குளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில், அங்கு, 160 வகை பறவைகள், 62 வகை பட்டாம்பூச்சிகள்
 720 வகையிலான பல்லுயிர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, சிங்காநல்லூர் குளத்தை பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

குறிப்பாக, சிங்காநல்லூர் குளத்தை பராமரித்து, அதை பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவும் வகையில், "நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தினர் (CUBE) பராமரித்து வருகின்றனர். குளம் அமைந்துள்ள கரைப்பகுதியைச் சுத்தம் செய்வது, மியா வாக்கி முறையில் மரங்கள் அமைப்பது, பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவுவது என்று பல்வேறு பணிகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிங்காநல்லூர் குளத்தில், நாட்டு மரக்கன்றுகளின் நாற்றங்கால் இன்று தொடங்கப்பட்டது. மேலும், சிங்காநல்லூர் குளத்தில் அதிகளவு உள்ள சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்தும் இந்த நிகழ்ச்சியில் விழிப்பு உணர்வு வழங்கப்பட்டது. குறிப்பாக, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கு சிட்டுக்குருவி காப்பு இயக்கம் சார்பில் தயாரிக்கப்பட்ட, பெட்டிகள் வழங்கப்பட்டன.

சிங்காநல்லூர்

இதுகுறித்து க்யூப் அமைப்பின் சொக்கலிங்கம் கூறுகையில், “தற்போதைய சூழ்நிலைக்கு நாட்டு மரங்களை காண்பதே அறிதாகிவிட்டது. அவற்றின் கன்றுகளையும் எளிதில் வாங்க முடியாது. எனவேதான், நாட்டு மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, நாட்டு மரங்களின் நாற்றங்கால் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, 30 வகையான நாட்டு மரக்கன்றுகள் இங்கு கிடைக்கும். விரைவில், 100 நாட்டு மரக்கன்று வகைகள் கிடைப்பதற்கு முயற்சி செய்து வருகிறோம்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில். வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவன இயக்குநர் மோஹித் ஜெரா, சிட்டுக்குருவிகள் காப்பு இயக்கத்தின் நிறுவனர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!