`மோடி சொன்னார்... இணைந்தோம்!’ - ஓ.பன்னீர்செல்வம் ஓப்பன் டாக்

`பிரதமர் மோடி, நான் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்று கூறினார். அதன் காரணமாகவே தற்போது அமைச்சரவையில் இருக்கிறேன்’ என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

ஓ. பன்னீர்செல்வம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடுவதுகுறித்த ஆலோசனைக்கூட்டம் இன்று (16/02/18) மாலை தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் குமார், கம்பம் எம்.எல்.ஏ., ஜக்கையன், தேனி எம்.பி.,பார்த்திபன், முன்னாள் எம்.பி., சையது கான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ``மூன்று பெயர்களைக் கொடுத்து, அதில் ஒன்றைத் தேர்வுசெய்து கொடுக்கும்படி டெல்லிக்குச் சென்று பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் கட்சிப்பணிக்கு வரும்போது, டி.டி.வி. தினகரன் கைப்பிள்ளை. எல்.கே.ஜி ஸ்டூடன்ட். சசிகலா தரப்பினரால் எனக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடிக்கு வேறு யாராக இருந்தாலும் தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள். அல்லது கட்சியைவிட்டே ஓடிவிடுவார்கள். அணிகள் இணைவதற்கு முன், பிரதமர் மோடியை நேரில் சந்தித்தேன். இப்போது இருக்கும் சூழலில் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். மேலும், எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம் என்று கூறினேன். ஆனால், நான் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்று கூறினார். அதன் காரணமாகவே தற்போது அமைச்சரவையில் இருக்கிறேன். கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது, தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் மூவருக்கு அனைத்துச் செலவுகளும் நான்தான் செய்தேன்`` என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!