ஶ்ரீரங்கம் கோயிலில் உள்ள 53 கடைகளுக்கு சீல்! - அறநிலையத்துறை அதிரடி

திருச்சி மாவட்டக் கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற இந்து அறநிலையத்துறை நோட்டீஸ் வழங்கியதை அடுத்து, கடைகளுக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீரங்கம்,  இந்து அறநிலையத்துறை நோட்டீஸ்

கடந்த 2-ம் தேதி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தை அடுத்து, கோயிலுக்குள் உள்ள கடைகளை அகற்றும் பணி தொடர்ந்தது. கோயிலில் உள்ள வீரவசந்தராய மண்டபத்தில், தீ விபத்து ஏற்பட்டு அந்த மண்டபத்தின் மேற்கூரை மற்றும் பசுபதீஸ்வரர் சந்நிதியின் மேற்கூரைகள் இடிந்துவிழுந்தன. அதோடு, கோயிலுக்குள் இருந்த 36 கடைகள் எரிந்து சாம்பலாகின.

மேலும் கோயில்களுக்குள் வைக்கப்பட்டுள்ள கடைகள் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, கோயிலுக்குள் இருக்கும் கடைகளை உடனே அகற்ற உத்தரவிட்டது. அதையடுத்து, விபத்து நடந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மண்டபத்தில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன. தற்போது, அதற்கான பணிகள் தொடர்கின்றன.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஶ்ரீரங்கம், சமயபுரம், திருப்பட்டூர், மலைக்கோட்டை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் விதிகளை மீறி கடைகள் உள்ளன. இதற்கிடையே, மதுரையில் நடந்ததுபோன்ற அசம்பாவிதம், வேறு எந்தக் கோயிலிலும் நடந்துவிடாமல் இருக்க திருச்சி ஶ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருப்பட்டூர் உள்ளிட்ட பிரபல கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற அறநிலையத்துறை கெடு விதித்தது.

ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் 21 கோபுரங்கள், பதினாறு கால் மண்டபம் மற்றும் நான்கு கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 20 கடைகளின் உரிமையாளர்களுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு, 'ஓரிரு தினங்களுக்குள் கடைகளை அகற்றிட வேண்டும். இல்லாவிட்டால், அறநிலையத்துறையே கடைகளை அகற்றும்' என இந்து அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதேபோல மலைக்கோட்டையில் உள்ள 50 கடைகளின் உரிமையாளர்களுக்கும், சமயபுரத்தை அடுத்த திருப்பட்டூர் பிரம்மா கோயிலில் உள்ள கடைகளின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு (16-02-2018), திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் உள்ளேயும் வெளியேயும் உள்ள 53 கடைகளை அகற்ற உத்தரவிட்டிருந்ததை அடுத்து, அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் வாங்கியும், உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட கடைகளுக்கும், முன்னதாகவே அகற்றப்பட்ட கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட நோட்டீஸில், இந்த இடம் திருக்கோயில் பராமரிப்பில் உள்ளது என வாசகம் அடங்கியுள்ளது. இதேபோல திருச்சியில் உள்ள மற்ற கோயில்களிலும் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!