`கணவரின் தொடர்பைக் கைவிடாததால் தங்கையைக் கடத்தினேன்!’ - சகோதரியின் அதிர்ச்சி வாக்குமூலம்

சரஸ்வதி மற்றும் நோவா

திருச்சி நகராட்சிப் பெண் ஊழியர் கடத்தல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம், திருச்சியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி, கணவரை இழந்தவர். தனியாக வசித்து வருவதுடன், துவாக்குடி நகராட்சியில் கிளர்க்காகப் பணியாற்றுகிறார். இந்நிலையில் நேற்று மாலை பணிகளை முடித்துவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்து நடந்து சென்றுகொண்டிருந்தபோது, டாடா சுமோ காரில் வந்த ஒரு கும்பல், புவனேஸ்வரியை வலுக்கட்டாயமாக காருக்குள் ஏற்றிச்சென்றது. புவனேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் துவாக்குடி போலீஸாருக்குத் தகவல்கொடுக்க, பொதுமக்களும் போலீஸாரும் இணைந்து கடத்தல் காரை துவாக்குடி அடுத்துள்ள மலைக்கோயில் அருகே  பிடித்தனர். இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் உசிலங்குளத்தைச் சேர்ந்த அசோக் என்கிற முனீஸ்வரன், காந்தி நகரைச் சேர்ந்த மனோ, தீபன் சக்ரவர்த்தி, அயனாவரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் உள்ளிட்ட நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தனிமையில் வசிக்கும் புவனேஸ்வரிக்கும் அவரின் சகோதரி சரஸ்வதியின் கணவருக்கும் தொடர்பு இருந்துவந்திருக்கிறது. இதுகுறித்து பலமுறை கண்டித்தும் புவனேஸ்வரி கேட்கவில்லை என்பதால், சரஸ்வதியே ஆட்களை வைத்து, புவனேஸ்வரியைக் கடத்தச்சொன்னது அம்பலம் ஆனது.

இதையடுத்து, திருச்சி பீமநகர் நியூ ராஜா காலனியைச் சேர்ந்த புவனேஸ்வரியின் அக்கா சரஸ்வதி, பீமநகரில் டூவீலர் மெக்கானிக் ஷாப் வைத்திருக்கும் திருச்சி கஜபதி தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் நோவா ஆகியோரும் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். விசாரணையில், சரஸ்வதி, முதல் கணவன் மதுரைவீரனை விட்டுப் பிரிந்து, தொழிலதிபர் கணேசன் என்பவரை 2-வதாகத் திருமணம் செய்துகொண்டு, சென்னையில் வசித்துவருவதாகக் கூறப்படுகிறது.

புவனேஸ்வரிஇந்நிலையில் சரஸ்வதி போலீஸாரிடம், கணேசனுக்கும் புவனேஸ்வரிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததைக் கண்டித்ததாகவும், அதை புவனேஸ்வரி கேட்காததால், அவளை மிரட்டுவதற்காக ஆள்வைத்துக் கடத்தினேன் எனவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்நிலையில், புவனேஸ்வரியை காரில் கடத்திய அசோக் (எ) முனீஸ்வரன், அவரது நண்பர்களான மனோ, தீபன்சக்ரவர்த்தி, முத்துகுமார் ஆகிய நான்கு பேர் மீதும், கெட்டவார்த்தையால் திட்டியது, ஆள்கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், துவாக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கைதுசெய்யப்பட்ட முனீஸ்வரன் மீது புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய இரண்டு காவல்நிலையங்களில் இரண்டு கொலை வழக்குகளும், முத்துகுமார் மீது புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் கொலை வழக்கும் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

தங்கையைக் கடத்துவதற்காக கொலைக்குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்த பெண் சரஸ்வதிதான், திருச்சி துவாக்குடி பகுதியில் ஹாட் டாக்கில் உள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!