வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (17/02/2018)

கடைசி தொடர்பு:11:47 (17/02/2018)

காதலர் தினத்தன்று மாணவிக்கு தொல்லை! விபரீத செயலில் ஈடுபட்ட வாலிபர் கைது!

பாலமுருகன்

மதுரை திருமங்கலம் அருகே, ஒன்பதாம் வகுப்பு மாணவி சித்ரா தேவி மீது ஒருதலைக் காதலால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற வாலிபர் பாலமுருகனை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 ஒன்பதாம் வகுப்பு மாணவி சித்ரா தேவி

மதுரை திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டையில்,  மணிப்பாண்டி, பேச்சியம்மாள்  தம்பதி வசித்துவருகின்றனர். இவர்களின் மகள் பிரியா (பெயர் மாற்றம்), வயது 14.  திரளியை அடுத்த அச்சம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறார்.

நடுவக்கோட்டையைச் சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் பாலமுருகன் (23). இவர், தனியார் மில்லில் வேலை செய்துவருகிறார் . இவர், மாணவி பிரியாவை ஒருதலையாகக் காதலித்துவந்துள்ளார். காதலர் தினத்தன்று, தனது காதலை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று மாணவியிடம் உறுதியாகக் கேட்டுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், அடுத்த நாள் மாலை மாணவி பள்ளி முடிந்து பேருந்துக்காகக் காத்திருந்தபோது, இருசக்கர வாகனத்தில் அந்தப் பகுதிக்கு வந்து,  தன்னிடம் இருந்த 2 லிட்டர் பெட்ரோலை மாணவியின் உடலில் ஊற்றி தீயைப் பற்றவைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். 

காயம் அடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு, திருமங்கலம் மருத்துவமனையில் முதலுதவி வழங்கிய பின், மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத் தொடர்ந்து, மாணவி தீக்காயப் பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், புதுப்பட்டி காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த பாலமுருகனைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.