வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (17/02/2018)

கடைசி தொடர்பு:11:24 (17/02/2018)

`நீதிமன்றத்தில் வாதிடவில்லையோ...' - தமிழக அரசுமீது விவசாயிகள் சங்கம் சந்தேகம்

காவிரி

காவிரி வழக்கில் தமிழக அரசு நமது நியாயமான வாதங்களை நீதிமன்றத்தில் எடுத்துவைத்து வாதிடவில்லையோ என்ற சந்தேகம் இருப்பதாக விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

காவிரி நதி நீர் பிரச்னை குறித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் சண்முகம் பேசும் போது, 'சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் காவிரிப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.  தமிழ்நாடு அரசு 264 டி.எம்.சி. தண்ணீர் கோரி வற்புறுத்திய நிலையில் நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி. வழங்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தது. தன்னுடைய இறுதி தீர்ப்பில் 192 டி.எம்.சி. தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் 14.75 டி.எம்.சி.யை குறைத்து அதாவது 177.25 டி.எம்.சி. வழங்க வேண்டுமென உத்தரவிட்டிருப்பது தமிழகத்திற்கு குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இவ்வாறு படிப்படியாக தமிழகத்திற்கான தண்ணீர் பங்கினை குறைத்திருப்பது நியாயமற்றது எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறது. காவிரி டெல்டா பகுதியில் 10 டி.எம்.சி. நிலத்தடி நீர் உள்ளதைக் கணக்கில் கொண்டு நீரின் அளவைக் குறைத்திருப்பதாகக் கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இதன் மூலம் தமிழகத்தின் பாசன உரிமை பாதிப்புக்குள்ளாகும் எனவும் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

நடுவர் மன்றம் தீர்மானித்த அளவை உச்ச நீதிமன்றம் குறைத்து தீர்மானித்திருப்பது ஒருவேளை தமிழக அரசு நமது நியாயமான வாதங்களை நீதிமன்றத்தில் எடுத்துவைத்து வாதிடவில்லையோ என்ற சந்தேகம் பரவலாக உள்ளது. தமிழக அரசு இதனை தெளிவுபடுத்துவதோடு கூடுதலான தண்ணீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

காவிரி நதியின் மீது எந்தவொரு மாநிலமும் தனி உரிமை கொண்டாட முடியாது எனவும், கர்நாடக அரசு புதிதாக அணைகள் கட்ட அனுமதியில்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறை திருப்தியளிப்பதாக உள்ளது. அதேசமயம் காவிரி மேம்பாட்டு ஆணையத்தையும், ஒழுங்காற்றுக்குழுவையும் மத்திய அரசு கட்டாயமாக அமைத்திடவும் ஒருவேளை அது காலதாமதம் செய்தால் அதனைக் கட்டாயமாக நிறைவேற்றிட வற்புறுத்துவதற்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசாங்கம் அமலாக்கத் தவறும் சூழ்நிலையில் தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை வழங்குவதற்கு காவிரி மேம்பாட்டு ஆணையத்திற்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமெனவும், பற்றாக்குறை காலங்களில் தமிழகம் பாதித்திடாமல் உரிய தண்ணீர் பங்கினைப் பெற்றிட தெளிவான பற்றாக்குறை கால பகிர்வு கோட்பாடுகள் வகுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழக அரசின் கோரிக்கைகளின் மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்புரையில் என்ன கூறியுள்ளது என்பதை முழுமையான தீர்ப்பை ஆய்வுக்குப் பின்னரே கருத்துத் தெரிவிக்க வேண்டியுள்ளது. 

குறைக்கப்பட்டுள்ள நீரின் அளவை உயர்த்திப் பெறுவதற்கு வற்புறுத்துகிற அதே நேரத்தில் தீர்ப்பின்படி மேம்பாட்டு ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் உடனடியாக அமைத்திடவும் தீர்ப்பை செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க