'கட்சிப் பெயர், சின்னம் ஒதுக்காதீங்க'- டி.டி.வி.தினகரனுக்கு செக் வைக்க முயலும் தேர்தல் ஆணையம் | E.P.S and O.P.S strongly opposing TTV Dinakaran's Interim petition

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (17/02/2018)

கடைசி தொடர்பு:12:40 (17/02/2018)

'கட்சிப் பெயர், சின்னம் ஒதுக்காதீங்க'- டி.டி.வி.தினகரனுக்கு செக் வைக்க முயலும் தேர்தல் ஆணையம்

டி.டி.வி. தினகரன் அணிக்கு  கட்சிப் பெயர் மற்றும் கட்சி சின்னத்தை ஒதுக்கிட வேண்டாம் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் வாதிட்டார்.

தங்கள் அணிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், கட்சிப் பெயரை வழங்க வேண்டும் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட ’பிரஷர் குக்கர்’ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் அணியினர் இடைக்கால மனு தாக்கல்செய்தனர். 

இம்மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அதில், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டும்தான் தேர்தல் ஆணையம்,  சின்னம் மற்றும் கட்சிப் பெயரை ஒதுக்கீடுசெய்ய இயலும். ஆனால்,டி.டி.வி.தினகரன் அணி, இந்த இரண்டு பிரிவிலுமே வரவில்லை என்பதால், டி.டி.வி. அணிக்கு கட்சிப் பெயர் மற்றும் கட்சி சின்னத்தை ஒதுக்கிட வேண்டாம் என தலைமைத் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் வாதிட்டார். 

ttv dinakaran, edappadi palanisamy

தான் தொடங்கவிருக்கும் புதிய கட்சிக்கு,  அகில இந்திய அம்மா அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகம், எம்.ஜி.ஆர். அம்மா திராவிடர் முன்னேற்றக் கழகம் மற்றும் எம்.ஜி.ஆர். அம்மா திராவிடர் கழகம் போன்ற மூன்று பெயர்களை வழங்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். டி.டி.வி.தினகரனுக்கு கட்சிப் பெயர், சின்னம் ஒதுக்க ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.