வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (17/02/2018)

கடைசி தொடர்பு:12:10 (17/02/2018)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1-வது யூனிட் பழுது - மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1-வது யூனிட்டில் ஏற்பட்ட திடீர் பழுதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி - அனல் மின் நிலையம்

இந்தியாவின் பழமையான அனல்மின் நிலையங்களில் தூத்துக்குடி அனல்மின் நிலையமும் ஒன்று. நிலக்கரி அடிப்படையிலான இந்த அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் உள்ளன. ஒரு யூனிட்டில் 210 மெகாவாட் வீதம் 5 யூனிட்டுகளில் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் முதல் மூன்று யூனிட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவைத் தாண்டியும் 20 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதனால் அவ்வப்போது யூனிட்டுகளில் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி தடைபடுகிறது. சில நேரங்களில் நிலக்கரியின் இருப்புக் குறைவதாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் மின் உற்பத்தி தடைபட்டு வந்தது.

சமீபகாலமாக மின் தேவை குறைந்து வருவதால் 3-வது மற்றும் 5-வது யூனிட்டில் மின் உற்பத்தி செய்யப்பட்டு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 1-வது யூனிட்டில் திடீரென பழுது ஏற்பட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

1-வது யூனிட்டில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 1-வது, 3-வது மற்றும் 5-வது யூனிட்டுகளில் மின் உற்பத்தி தடைபட்டுள்ளதால் 630 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க