வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (17/02/2018)

கடைசி தொடர்பு:12:48 (17/02/2018)

கர்நாடகா அணைகளின் நீர் இருப்பு எவ்வளவு? ; பிப்ரவரிக்கான நீர் தமிழகத்திற்குக் கிடைக்குமா?

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு, 2007-ல் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு 192 டி.எம்.சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்தது. தற்போது 177.25 டி.எம்.சி தண்ணீர், நிலத்தடி நீரை அளவுகோலாக வைத்துத் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், கேரளாவுக்கு 30 டி.எம்.சி, புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி என்ற நடுவர் மன்றத் தீர்ப்பில் மாற்றம் எதுவுமில்லை. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் வரை இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடிவருகின்றனர். ஆனால் தமிழகத்தில், தீர்ப்புகுறித்து டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்ப்புக் குரல்களைத் தவிர, பெரிய அளவில் பிரச்னை ஏதுவும் இல்லை. 

கர்நாடகா கேஆர்எஸ் 

காவிரி நடுவர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, முறையாக கர்நாடகா அரசு நடைமுறைப்படுத்துமா என்ற கேள்வி தற்போது முன்வைக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு மே மாதம் வரை காவிரி நீரை கர்நாடகா பகிர்ந்து அளிக்க வேண்டும். தற்போது வழங்கியுள்ள தீர்ப்பு, 15 ஆண்டுகளுக்கு இரண்டு மாநிலங்களும் மேல் முறையீடு செய்ய முடியாத தீர்ப்பு என்பதால், இரண்டு மாநில அரசுகளும் இதை ஏற்று செயல்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, ஆண்டுதோறும் தமிழகத்துக்கு ஜூன் 10 டி.எம்.சி, ஜூலை 34 டி.எம்.சி, ஆகஸ்ட் 50 டி.எம்.சி, செப்டம்பர் 40 டி.எம்.சி, அக்டேபர் 22 டி.எம்.சி, நவம்பர் 15 டி.எம்.சி, டிசம்பர் 8 டி.எம்.சி, ஜனவரி 3 டி.எம்.சி, பிப்ரவரி 2.5 டி.எம்.சி, மார்ச் 2.5 டி.எம்.சி, ஏப்ரல் 2.5 டி.எம்.சி, மே 2.5 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். இதில் பாண்டிச்சேரிக்கு 7 டி.எம்.சி நீரும், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பு கருதி 10 டி.எம்.சி நீரை கூடுதலாக விட வேண்டும்.

கடந்த 2017-ம் ஆண்டு கணக்கின்படி, ஒகேனக்கலை அடுத்துள்ள மத்திய நீர் அளவீடு செய்யும் பிலிகுண்டில், 112 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கர்நாடகா அரசு வழங்கியுள்ளது. தற்போதைய தீர்ப்பின்படி கணக்கீட்டாலும், 65 டி.எம்.சி நீரை கர்நாடாக தமிழகத்துக்கு வழங்க வேண்டும். கர்நாடகா அரசு வழங்குமா என்பது சந்தேகமே. இதை, காவிரி நடுவர் நீதிமன்றம் செயல்படுத்துமா என்ற கேள்வியை விவசாயிகள் முன் வைக்கின்றனர்.

காரணம், கர்நாடகாவின் முக்கிய அணைகளின் தற்போதை நீர் இருப்பு நிலவரம்; கே.ஆர்.எஸ் அணை 124.80 அடியில் 45.05 டி.எம்.சி கொள்ளவுகொண்டது. நேற்று (16.2.2018) அதன் நீர் 91.91 அடியில் 12.71 டிம் தண்ணீர் இருப்பு உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு (16.2.2017)-ல் 78.27 அடியில் 5.77 டி.எம்.சி தண்ணீர் இருப்பு இருந்துள்ளது.

அதேபோல, கபினி அணையில் தற்போதைய (16.2.2018) நீர் இருப்பு 7.18 டி.எம்.சி-யாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு (16.2.2017), 1.81 டி.எம்.சி நீர் இருப்பு இருந்துள்ளது.