’புஷ்பவனம் குப்புசாமிக்கு என்ன தகுதி இல்லை?’ - ராமதாஸ் காட்டம்

ராமதாஸ்

'தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் பிரமீளா குருமூர்த்தி      நியமிக்கப்பட்டதில்  கடுமையான விதிமீறல்கள் நடந்துள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். 

இசை, நடனம், ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளில் உள்ள மகத்துவத்தை இளையதலைமுறையினர்க்கு உணர்த்துவதற்காகவும், இக்கலைகளை நேர்த்தியாகக் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கிலும் துவங்கப்பட்டதுதான், தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம். அதனால் இசை, நடனம், ஓவியம், சிற்பம் ஆகிய ஏதேனும் ஒன்றில் கலை தேர்ந்தவர்கள்தான் இப்பதவிக்குத் தகுதியானவர்கள். 

துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவரைத் தேர்ந்தெடுப்பதற்காக கர்நாடக இசைப்பாடாகி சுதா ரகுநாதன் தலைமையில், ஓய்வு பெற்ற அதிகாரி தங்கவேலு மற்றும் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. இப்பதவிக்கு 13 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கிராமிய இசைப் பாடகரும், இசையில் முனைவர் பட்டம் பெற்றவருமான புஷ்பவனம் குப்புசாமியும், இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். இறுதியில்  தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கேரளாவைச் சேர்ந்த பிரமீளா குருமூர்த்தி நியமிக்கப்பட்டார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், 

’இசைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நிச்சயமாக தகுதி அடிப்படையில் நிரப்பப்படவில்லை என்பதை உறுதியாக கூற முடியும். புஷ்பவனம் குப்புசாமி, பிரமீளா குருமூர்த்தி ஆகியோரின் தகுதிகளை  ஒப்பிட்டால் குப்புசாமி தான் முன்னிலையில் இருப்பார். இசை, நடனம், ஓவியம் மற்றும் சிற்பத்தின் மகத்துவத்தை இளையதலைமுறையினருக்கு உணர்த்த வேண்டும் என்பதன் அடிப்படையில் இசைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டதாக தமிழக அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி இசை, நடனம், ஓவியம், சிற்பம் ஆகியவற்றில் ஒன்றில் புலமை பெற்ற ஒருவர் தான் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் புஷ்பவனம் குப்புசாமி தமிழிசையில் முனைவர் பட்டம் பெற்றவர்; இசை குறித்து 5 நூல்கள் எழுதியுள்ளார்; கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். ஆனால், பிரமீளா குருமூர்த்தி இசையில் முனைவர் பட்டம் பெறவில்லை. மாறாக கதை சொல்லும் கலையான கதாகாலட்சேபத்தில் தான் பட்டம் பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி இசைத்துறையின் வளர்ச்சிக்கு வேறு எந்த வகையிலும் அவர் பங்களிக்கவில்லை.

துணை வேந்தர் நியமனத்தில் இன்னொரு பின்னணியும் உள்ளது. துணைவேந்தர் தேர்வுக்குழுவின் தலைவர் சுதா ரகுநாதனுக்கு அமெரிக்காவில் செயல்பட்டு வரும் கிளீவ்லாந்து பைன் ஆர்ட்ஸ் நிறுவனம் பல விருதுகளையும், பட்டங்களையும் வழங்கியுள்ளது. இந்நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்புடையவர் தான் பிரமீளா குருமூர்த்தி ஆவார். இந்த நெருக்கத்தின் அடிப்படையில் தான் பிரமீளாவின் பெயரை சுதா ரகுநாதன் தலைமையிலான குழு பரிந்துரைத்திருக்கிறது. இந்த உறவை உறுதி செய்யும் வகையில் துணைவேந்தராக பொறுப்பேற்றவுடன், அமெரிக்க மாணவர்களுக்கு இசை கற்றுக் கொடுப்பதற்காக  கிளீவ்லாந்து பைன் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை பிரமீளா குருமூர்த்தி செய்து கொண்டுள்ளார். இதற்காகவே இந்த நியமனம் செய்யப்பட்டதாக தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள இசைப் பல்கலைக்கழகத்திற்கு தமிழிசை மற்றும் மக்கள் இசையில் வல்லமை  பெற்றவர்களைத் தான் துணைவேந்தராக நியமிக்க வேண்டும். அதைவிடுத்து விதிமுறைகளை மீறி தமிழுக்கு அந்நியமானவர்களை துணை வேந்தராக நியமித்ததை ஏற்க முடியாது. எனவே, தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பிரமீளா குருமூர்த்தி நியமனம் செய்யப்பட்டதை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த  அனைவரின் தகுதிகளையும் ஆராய்ந்து மிகத் தகுதியானவரை துணைவேந்தராக நியமிக்க வேண்டும்’ என்று கடுமையாக சாடியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!